ஓ.டி.டி.யில் வெளியான 'தி லெஜண்ட்' திரைப்படம்... 'நம்பர் 1' இடத்தைப் பிடித்ததாக படக்குழு தகவல்
‘தி லெஜண்ட்’ திரைப்படம் ஸ்ட்ரீமிங்கில் ‘நம்பர் 1’ இடத்தை பிடித்துள்ளதாக லெஜண்ட் சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.;
Image Courtesy : @yoursthelegend twitter
சென்னை,
கடந்த ஆண்டு வெளியான 'தி லெஜண்ட்' திரைப்படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார் லெஜண்ட் சரவணன். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஊர்வசி ரவுட்டேலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஓ.டி.டி.யில் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் 'தி லெஜண்ட்' திரைப்படம், நேற்று (03.03.2023) மதியம் 12.30 மணிக்கு ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் ஸ்ட்ரீமிங்கில் 'நம்பர் 1' இடத்தை பிடித்துள்ளதாக லெஜண்ட் சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.