64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான் - கமல்ஹாசன்

64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-12 12:16 GMT

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 64 வருடங்கள் ஆகின்றன. 1960-ம் ஆண்டு வெளியான 'களத்தூர் கண்ணம்மா' கமல்ஹாசனின் அறிமுகப் படம். அப்போது அவருக்கு வயது 6. தெலுங்கில் நடித்த 'மரோ சரித்ரா', 'சுவாதி முத்யம்' இந்தியில் நடித்த 'ஏக் துஜே கேலியே', 'சத்மா', 'சாகர்' போன்ற படங்களின் வெற்றி மற்ற மொழி ரசிகர்களிடமும் அவரை பிரபலப்படுத்தின.

4 முறை தேசிய விருதுகள், உயரிய பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார். இன்னொரு புறம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனத்தை தொடங்கி தனது 100-வது படமான 'ராஜபார்வை' படத்தை தயாரித்தார். 'விக்ரம்', 'சத்யா', 'அபூர்வ சகோதரர்கள்', 'தேவர் மகன்', 'சதிலீலாவதி', 'விருமாண்டி', உள்ளிட்ட படங்களையும் தயாரித்து இருந்தார். 'இந்தியன்', 'குருதிப்புனல்', 'தேவர் மகன்', 'நாயகன்', 'சாகர்' ஆகிய படங்கள் 'ஆஸ்கார்' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

சமீபத்தில் வெளியான 'விக்ரம்-2' படம் கமல்ஹாசனின் புகழை மேலும் பறைசாற்றியது. 'மெகா ஹிட்' ஆன இந்தப்படத்தால் இன்றைய தலைமுறை ரசிகர்களும் அவர் பக்கம் திரும்பினர். 'தசாவதாரம்' படத்தில் 10 வேடங்களில் 10 விதமான குரல்களை பேசி அசத்தினார். தற்போது 'கல்கி' படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர இரண்டு புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

உலக நாயகன் என்ற பட்டத்திற்கு ஏற்ப உலக தரத்தில் தனது ரசிகர்களுக்கு திரைப்படங்களை கொடுத்து வரும் கமல்ஹாசன், சினிமாவில் தனது 64-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக" என்று அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்