தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி: நடிகர் அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.;
ஐதராபாத்,
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' படம் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை பார்க்க சென்றார். அவருடன் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா தியேட்டருக்கு வந்தனர்.
இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட மறுநாளே அல்லு அர்ஜுன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தியேட்டர் உரிமையாளர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.