சென்னை-28 இரண்டாம் பாகம்

கதாநாயகன்-கதாநாயகி: ஜெய்-சானா அல்தாப். டைரக்‌ஷன்: வெங்கட் பிரபு. கதையின் கரு: கிரிக்கெட் போட்டியும், ஒரு இளைஞனின் கலாட்டா கல்யாணமும். சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ளது. முதல் பாகத்தில் கிரிக்கெட் விளையாடிய சி

Update: 2016-12-17 23:25 GMT
கதாநாயகன்-கதாநாயகி: ஜெய்-சானா அல்தாப்.
டைரக்‌ஷன்: வெங்கட் பிரபு.

கதையின் கரு: கிரிக்கெட் போட்டியும், ஒரு இளைஞனின் கலாட்டா கல்யாணமும்.

சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ளது. முதல் பாகத்தில் கிரிக்கெட் விளையாடிய சிவா, நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய்ராஜ் ஆகியோர் திருமணம் முடிந்து மனைவி-குழந்தை என்று ஒதுங்கி வாழ்கிறார்கள். பிரேம்ஜிக்கு திருமணம் ஆகவில்லை. ஜெய் கிராமத்து பெண் சானா அல்தாப் மீது காதல் வயப்பட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை மணக்க தயாராகிறார்.

திருமணத்தில் பங்கேற்க நண்பர்கள் அனைவரும் தேனிக்கு செல்கின்றனர். அங்கு பழைய நண்பன் அரவிந்த் ஆகாஷை சந்திக்கின்றனர். அவருக்கும் அதே ஊரில் வசிக் கும் வைபவ்க்கும் கிரிக்கெட் விளையாட்டில் தீராத பகை. போட்டியில் வைபவை தோற்கடிக்க துடித்துக்கொண்டு இருக் கும் அரவிந்த் ஆகாஷ், நண்பர்கள் உதவியை நாடுகிறார்.
அவருக்காக நண்பர்கள் களம் இறங்கி அரையிறுதி போட்டியில் வைபவ் அணியை தோற்கடிக்கின்றனர். இதனால் வைபவ் கடுப்பாகி போதையில் இருக்கும் நண்பர்களிடம் அழகியை அனுப்பி அதை படம் பிடிக்கிறார். அந்த படம் இணைய தளத்தில் வெளியாகி திருமண வீடு ரணகளமாகிறது. ஜெய்- சானா அல்தாப் திருமணம் நின்று போகிறது. நண்பர்கள் விரட்டப்படுகின்றனர். வீட்டுக்கு திரும்பும் அவர்கள் ஜெய்யுடன் காதலியை சேர்த்து வைக்கவும் வைபவை பழிவாங்கவும் முடிவு செய்கின்றனர். அது நடந்ததா என்பது மீதி கதை.

ஜெய் யதார்த்தமாய் வருகிறார். திருமணம் நின்று போன விரக்தியில் அனுதாபம் பெறுகிறார். கூத்து, விளையாட்டு சமாசாரங்களை மூட்டை கட்டி விட்டு மனைவிக்கு பயப்படும் அப்பாவி கணவன்களாக வரும் சிவா நகைச்சுவையில் கலகலக்க வைக்கிறார். விஜய் வசந்த் கிரிக்கெட் விளையாட ஒவ்வொருவரையும் அழைத்து ஏமாற்றமாவதில் ஈர்க்கிறார். நிதின் சத்யா மனைவியிடம் திருமணத்துக்கு பிறகு சந்தோஷங்களை இழந்த வேதனைகளை சொல்லி ஆவேசப்படும் காட்சியில் அழுத்தமாய் நிற்கிறார். பிரேம்ஜி சிரிக்க வைக்கிறார். கிரிக்கெட் மைதானத்தில் இவரது ஏடாகூட ஆட்டம் ரசிக்க வைக்கிறது.

வைபவ் கிராமத்து வில்லனாக மிரட்டுகிறார். அரவிந்த் ஆகாஷ் கிரிக்கெட் பைத்தியமாய் மனதில் நிற்கிறார். விஜயலட்சுமி, கிருத்திகா, மகேஷ்வரி, அஞ்சனா கீர்த்தி அடாவடி மனைவிகளாக வருகிறார்கள். ஜெய் காதலியாக வரும் சானா அல்தாப் கவர்கிறார். சானாவின் தந்தையாக பாசமும் கோபமுமாய் அழுத்தம் பதிக்கிறார் டி.சிவா. கிராமத்து போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நாகேந்திரன் நேர்த்தி. சொப்பன சுந்தரி பாடலில் மனிஷா யாதவ் கவர்ச்சி.

இளவரசு, மகத், சந்தான பாரதி, பஞ்சு சுப்பு, இனிகோ, சச்சு ஆகியோரும் உள்ளனர். கிரிக்கெட் விளையாட்டு அதை சுற்றி நடக்கும் நட்பு, மோதல், குடும்ப சச்சரவு விஷயங்களை கலகலப்பும் விறுவிறுப்புமாய் நகர்த்தி படத்துடன் ஒன்ற வைக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அம்சம், ராஜேஷ் யாதவ் கேமரா கிரிக்கெட் விறுவிறுப்பை கண்முன் நிறுத்துகிறது. காதல் காட்சிகளில் ஈர்ப்பு இல்லாதது குறை.

மேலும் செய்திகள்