எய்தவன்

தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் நடைபெறும் மோசடிகளை திகிலுடன் சித்தரிக்கும் படம்.

Update: 2017-05-22 17:15 GMT
கலையரசனின் தங்கை சவும்யா, ‘பிளஸ்-2’ தேர்வில் அதிக மார்க்கு வாங்குகிறார். அவர் டாக்டருக்கு படிக்க ஆசைப்படுகிறார். தங்கையின் ஆசையை நிறைவேற்ற கலையரசன் கஷ்டப்பட்டு ஐம்பது லட்சத்தை புரட்டிக் கொடுத்து, ஒரு தனியார் கல்லூரியில் சேர்க்கிறார். அந்த வருடம் பார்த்து அந்த கல்லூரி மருத்துவ படிப்புக்கான அங்கீகாரத்தை இழந்து விடுகிறது.

கல்லூரி நிர்வாகத்திடம் பணத்தை திருப்பி கேட்கிறார், கலையரசன். பணத்தை திரும்ப கொடுக்க கல்லூரி நிர்வாகம் மறுக்கிறது. போலீசில் புகார் கொடுப்பதற்காக கலையரசன் தங்கையை அழைத்து செல்லும்போது, கார் மோதி தங்கை பலியாகிறார். தங்கையின் மரணத்துக்கு காரணமானவர்களை கலையரசன் எப்படி பழிவாங்குகிறார்? என்பது கதை.

கலையரசன் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்து இருக்கிறார். அவருக்கும், சட்னா டைட்டசுக்குமான காதலும், மோதலும் ரசிக்கும்படி படமாக்கப்பட்டு இருக்கிறது. சட்னா டைட்டஸ் காக்கி உடையில் கம்பீரமான அழகி. அவருடைய கண்களில், 440 வால்ட் மின்சாரம்.

வில்லன் கவுதம், அவருடைய உதவியாளராக ‘ஆடுகளம்’ நரேன், கலையரசனின் தந்தையாக வேல ராமமூர்த்தி, லோக்கல் ரவுடி தர்மனாக கிருஷ்ணா ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்துகிற நடிகர்கள். சி.பிரேம்குமாரின் ஒளிப்பதிவும், பார்தவ் பார்கோவின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு திகில் சேர்க்கின்றன.

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை கருவாக வைத்துக் கொண்டு திகில் பட பாணியில் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் சக்தி ராஜசேகரன். ‘ஆடுகளம்’ நரேனின் கர்ப்பிணி மனைவியை மிரட்டியும், பரிதாபப்பட வைத்தும் முக்கிய தஸ்தாவேஜுகள் அடங்கிய ‘பைல்’லை கலையரசன் பெறுகிற காட்சி, நம்பும்படி இல்லை. படத்தின் இறுதி கட்டத்தில் வரும் கவர்ச்சி நடன பாடல், தேவையில்லாத திணிப்பு.

இந்த குறைகள் தெரியாத அளவுக்கு புத்திசாலித்தனமான திரைக்கதையும், காட்சிகளும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. சரியான நேரத்தில் வந்திருக்கும் சரியான படம்.

மேலும் செய்திகள்