பண்டிகை

கதையின் கரு: சூதாட்டமும், அதன் பாதிப்பும்... ‘பண்டிகை’ என்ற பெயரில், மதுசூதனன் ரகசியமாக குத்துச்சண்டை சூதாட்டம் நடத்தி வருகிறார்.

Update: 2017-07-21 06:08 GMT
இந்த சூதாட்டத்தில் கலந்து கொண்ட சரவணன் வீடு வாசல், சொத்து சுகங்களை இழக்கிறார். விட்ட இடத்திலேயே பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அவர் இருக்கும்போது, அடிதடியில் தேர்ந்த கிருஷ்ணாவை பார்க்கிறார். இவரை வைத்து சூதாட்டத்தை தொடர்ந்து, இழந்ததை எல்லாம் பிடிக்க முயற்சிக்கிறார், சரவணன்.

கிருஷ்ணாவுக்கு ஆனந்தி மீது காதல். அந்த காதலை காப்பாற்றவும், வெளிநாடு சென்று வேலை செய்யவும் கிருஷ்ணாவுக்கு பணம் தேவைப்படுகிறது. இருப்பினும், சரவணனின் வலையில் சிக்க முதலில் அவர் மறுக்கிறார். வேறு வழியில்லாத நிலையில், சரவணனின் வலையில் கிருஷ்ணாவே வந்து விழுகிறார்.

கிருஷ்ணாவை வைத்து சரவணன் பெரிய அளவில் குத்துச்சண்டை நடத்தி, நிறைய பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டுகிறார். அதன்படி, பந்தயத்தில் கிருஷ்ணா தோற்க வேண்டும் என்று சொல்கிறார், சரவணன். அதற்கு கிருஷ்ணாவும் சம்மதிக்கிறார். ஆனால், இறுதிக்கட்ட மோதலில், கிருஷ்ணா ஜெயித்து விடுகிறார். நொந்து போகிறார், சரவணன். விரக்தி அடைந்த அவரிடம், மதுசூதனன் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை கொள்ளையடிக்க ‘ஐடியா’ கொடுக்கிறார், நிதின் சத்யா. மதுசூதனன் பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? சரவணனின் பிரச்சினைகள் தீர்ந்ததா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

கிருஷ்ணாவுக்கு அளவு எடுத்து தைத்த சட்டை மாதிரி, கதாபாத்திரம் பொருந்துகிறது. முதல் பார்வையிலேயே ஆனந்தியிடம் அவர் மனதை பறிகொடுப்பது; குத்துச்சண்டை போட்டியில் ஆவேசமாக மோதி ஜெயிப்பது; மதுசூதனன் வீட்டில் கொள்ளையடிப்பது; எதிரிகள் சுற்றி வளைக்கும்போது, சாதுர்யமாக பணப்பைகளுடன் தப்பிப்பது என கிருஷ்ணாவுக்கு படத்தில் அதிக வேலை. சுறுசுறுப்பாக செய்து இருக்கிறார்.

பெரிய கண்களும், விழுங்கும் பார்வையுமாக அழகில் கவர்கிறார், ஆனந்தி. நடிப்பில், ரொம்ப சுமார். கிருஷ்ணாவை அடுத்து சரவணனின் கதாபாத்திரமும், நடிப்பும் மனதில் பதிகிறது. நிதின் சத்யா, அடையாளம் தெரியாத அளவுக்கு தன் தோற்றத்தை மாற்றியிருக்கிறார். கருணாஸ் வருகிற காட்சிகளில் எல்லாம் திருப்பம்.

குத்துச்சண்டை தொடர்பான காட்சிகளை திகில் கலந்து படமாக்கியதில், ஒளிப்பதிவாளர் அர்வியின் பங்கு நிறைய. பின்னணி இசையில் பெயர் வாங்குகிறார், இசையமைப்பாளர் ஆர்.எச்.விக்ரம். இடைவேளை வரை மெதுவாக நகரும் திரைக்கதை, அப்புறம் வேகம் பிடிக்கிறது. கிளைமாக்ஸ், இருக்கை நுனியில் அமர வைக்கிறது.

மேலும் செய்திகள்