திருட்டுப்பயலே–2

திருட்டுப்பயலே–2 படத்தின் சினிமா விமர்சனம்.

Update: 2017-12-03 17:51 GMT
கதையின் கரு:  பாபி சிம்ஹா, போலீஸ் இன்ஸ்பெக்டர். இவருடைய காதல் மனைவி, அமலாபால். இவருக்கு முகநூல் மூலம் அறிமுகமான நண்பர், பிரசன்னா. உயர் போலீஸ் அதிகாரி ‘வழக்கு எண்’ முத்துராமன் உத்தரவின்படி, பாபி சிம்ஹா உயர் போலீஸ் அதிகாரிகளின் போன்களை ஒட்டு கேட்கும் வேலையில் ஈடுபடுகிறார். அப்போது அவருடைய மனைவி அமலாபால், பிரசன்னாவுடன் பேசுவதை ஒட்டு கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

பிரசன்னாவை பாபி சிம்ஹா அடித்து உதைத்து, தன் மனைவியுடன் வைத்திருக்கும் நட்பை முறித்துக் கொள்ளும்படி, எச்சரிக்கிறார். அதற்கு பிரசன்னா மறுத்து விடுவதுடன், பாபி சிம்ஹா போனில் ஒட்டு கேட்கும் ரகசியங்களை வெளியிடப் போவதாக மிரட்டுகிறார். அதிர்ச்சி அடையும் பாபி சிம்ஹா, மனைவி அமலாபால் பற்றிய முகநூல் தடயங்களை அழித்து விட்டு, அமலாபாலுடன் வெளிநாடு சென்று விடுகிறார்.

அதையும் மோப்பம் பிடித்து பிரசன்னா வெளிநாட்டுக்கு வந்து விடுகிறார். பாபி சிம்ஹா இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்து அமலாபாலுடன் கட்டாய உறவு கொள்ள முயற்சிக்கிறார். அவருடைய பிடியில் சிக்கும் அமலாபால் என்ன ஆகிறார்? பாபி சிம்ஹா, பிரசன்னாவின் மோதல்களுக்கு முடிவு ஏற்பட்டதா? என்பது பரபரப்பான ‘கிளைமாக்ஸ்.’

பாபி சிம்ஹா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், பொருந்துகிறார். பிரசன்னாவின் பிடியில் மனைவி அமலாபால் சிக்கியிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடையும்போதும், ஆத்திரத்தில் பிரசன்னாவை அடித்து துவம்சம் செய்யும்போதும், சராசரி கணவர்களுக்கே உரிய கோபத்தையும், ஆக்ரோ‌ஷத்தையும் மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார்.

அழகான அமலாபாலுக்கு மேலும் அழகும், கவர்ச்சியும் சேர்க்கிறது, அவருடைய கதாபாத்திரம். பிரசன்னாவின் மிரட்டல்களை கணவரிடம் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கிற காட்சிகளில், அமலாபால் அனுதாபங்களை அள்ளுகிறார்.

மற்ற கதாபாத்திரங்களை எல்லாம் தனது திறமையான நடிப்பால் பின்னால் தள்ளி விடுகிறார், வில்லன் பிரசன்னா. அவருடைய வசீகர சிரிப்பும், குரலும் அமைதி புயலாக மிரட்டுகின்றன. ஓடும் ரெயிலில் தன்னை நோட்டமிடும் பாபி சிம்ஹாவிடம் தைரியமாக சென்று அறிமுகப்படுத்திக் கொள்வதில் இருந்து, கை–கால் விளங்காத நோயாளியாக வீல் சேரில் முடங்கிப் போவது வரை–வில்லாதி வில்லனாக பிரசன்னா மிரட்டியிருக்கிறார். சிரித்துக் கொண்டே பயமுறுத்தும் பிரசன்னாவின் வில்லத்தனத்துக்கு விருது கொடுத்து பாராட்டலாம்.

துப்பறிவாளராக சுசி கணேசன், அமைச்சராக எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய தெரிந்த முகங்களுடன், பரிச்சயமில்லாத நடிகர்கள் நிறைய. அதுவே காட்சிகளுக்கு கனம் கூட்டுகிறது.

போக்குவரத்து மிகுந்த சென்னை நகரையும், அதன் பரபரப்பையும் மிக அழகாக படம் பிடித்து இருக்கிறார், ஒளிப்பதிவாளர் செல்லதுரை. கடைசி காட்சியில், புக்கட் தீவின் பசுமை நிறைந்த மலைகளும், படகு பயணமும் கண்களுக்கு விருந்து. கதையுடன் ஒன்றிய பின்னணி இசை, வித்யாசாகரின் பெயர் சொல்கிறது.

முகநூல் பக்கத்தின் ஆபத்துகளை கருவாக வைத்துக் கொண்டு ஒரு திகில் படத்துக்குரிய வேகத்துடன் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் சுசி கணேசன். சில காட்சிகள், இதய துடிப்பை அதிகரிக்க செய்கின்றன.

‘கிளைமாக்ஸ்,’ சரியான முடிவுதான். அதற்காக ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்?

மேலும் செய்திகள்