விஸ்வாசம்

மகளின் லட்சியம் நிறைவேற உதவும் அப்பா. படம் ‘விஸ்வாசம்’ கதாநாயகன் அஜித்குமார், கதாநாயகி நயன்தாரா, டைரக்‌ஷன் சிவா இயக்கியுள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் விமர்சனம்.

Update: 2019-01-12 16:36 GMT
கதையின் கரு:  அந்த கிராமத்தின் மரியாதைக்குரிய நபர், அஜித்குமார். ஊரில் உள்ள அடிதடி வீரர்கள் எல்லாம் பயப்படுகிற பெரிய தலகட்டு. 10 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கோவில் திருவிழாவை நடத்த வேண்டும் என்று ஒரு கோஷ்டியும், நடத்தக் கூடாது என்று இன்னொரு கோஷ்டியும் மல்லுக்கு நிற்கிறார்கள். திருவிழாவை நடத்தியே ஆக வேண்டும் என்று அஜித் உத்தரவிட-பயந்து போன எதிர் கோஷ்டியினரும் அதற்கு சம்மதிக்கிறார்கள்.

“திருவிழாவுக்கு நிரஞ்சனா (நயன்தாரா)வை அழைக்க வேண்டும்” என்று அஜித்தை உறவினர்கள் வற்புறுத்த-அதற்கு அஜித் சம்மதிக்கிறார். அவருடைய நினைவுகள் பின்நோக்கி போக-‘பிளாஷ்பேக்’கில், அந்த ஊரில் மருத்துவ முகாம் நடத்த டாக்டர் நயன்தாரா வருகிறார். முகாம் நடத்த தனது வீட்டில் இடம் கொடுக்கிறார், அஜித். இருவருக்கும் காதல் மலர்கிறது. திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

இந்த நிலையில், அஜித்தை வெட்ட வந்த ஒரு ரவுடியின் அரிவாள் வெட்டு குழந்தையின் கழுத்தையும் தாக்க-குழந்தைக்கு பாதுகாப்பு இல்லை என்று சண்டை போட்டு, நயன்தாரா பிரிந்து போகிறார். குழந்தையுடன் மும்பையில் குடியேறுகிறார். 10 வருடங்களுக்கு பிறகு மனைவியையும், குழந்தையையும் அழைத்து வர அஜித், மும்பைக்கு போகிறார். குழந்தை வளர்ந்து பெரியவளாக நிற்கிறாள். ஓட்டப்பந்தய வீராங்கனையான அவளை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது.

அந்த கும்பலை ஏவுகிறவன் யார், அவனுக்கும், அஜித்தின் மகளுக்கும் என்ன தொடர்பு, கொலைகாரர்களிடம் இருந்து அஜித் தன் மகளை எப்படி காப்பாற்றுகிறார்? என்பது பின்பகுதி கதை.

அஜித்குமார் மதுரை தமிழ் பேசி நடித்து இருக்கிறார். வெள்ளை வேட்டி-சட்டையுடன், முறுக்கு மீசையும் தாடியுமாக, ‘தூக்கு துரை’ என்ற கிராமத்து பிரமுகராக வாழ்ந்திருக்கிறார். “இஞ்சார்யா” என்றபடி, அவர் வேட்டியை மடித்துக் கட்டுவதே அழகு. நயன்தாராவின் கண்கள், மூக்கு, முகம் என்று ஒவ்வொன்றாக வர்ணிக்கும் காதலராகவும், தம்பி ராமய்யா, ரோபோ சங்கருடன் நகைச்சுவை நாயகனாகவும், எதிரிகளை எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு அடித்து உதைக்கும் அதிரடி வீரராகவும், பாசமுள்ள தந்தையாகவும் அஜித் மனசெல்லாம் நிறைகிறார்.

குறிப்பாக, அவர் தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல், மகளின் பாதுகாவலராக இருந்து கொண்டு கொலையாளிகளிடம் இருந்து மகளை காப்பாற்றுகிற காட்சிகளிலும், அப்பாவை வெறுப்பதாக அவரிடமே மகள் சொல்லும்போதும், கண்களை குளமாக்கி விடுகிறார், அஜித். அந்த மகளிடம், “அம்மாவை யார் நேசிக்கிறார்களோ, அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்து நிற்பார்கள்” என்று அறிவுரை சொல்லும்போது, அழவைத்து விடுகிறார்.

நயன்தாரா படத்தின் முன்பகுதியில் அழகாக தெரிகிறார். பின்பகுதியில், அவரின் இறுக்கமான முகத்தை ரசிக்க முடியவில்லை. மகள் மீது அவர் காட்டும் பாசமும், கணவரையும், மகளையும் சேர்ந்து பார்க்கும்போது காட்டும் நெகிழ்ச்சியும் உணர்ச்சிகரமான காட்சிகள். அந்த காட்சிகளில், நயன்தாராவின் அனுபவம் பேசியிருக்கிறது.

விவேக், தம்பிராமய்யா, யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகிய 4 பேரும் கலகலப்பூட்டுகிறார்கள். ஜெகபதிபாபு, ஆடம்பர வில்லனாக மிரட்டுகிறார்.

வெற்றியின் ஒளிப்பதிவில் கிராமத்து எழிலும், பசுமையும் அழகுக்கு அழகு சேர்த்து இருக்கிறது. இமான் இசையில், “அடிச்சி தூக்கு” பாடலும், அஜித் நடனமும் ரசிகர்களுக்கு உற்சாகத்தின் உச்சகட்டம். “கண்ணான கண்ணே” பாடல், நெகிழவைக்கிறது. படத்தின் முதல் பாதி காதலும், காமெடியுமாக மிதமான வேகத்தில் கடந்து போகிறது. இரண்டாம் பாதியில், சூப்பர் வேகத்துடன் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் சிவா. அஜித் ரசிகர்களுக்கு, இது சர்க்கரை பொங்கல்.

மேலும் செய்திகள்