பதற்றம், விறுவிறுப்பாக செல்லும் "செவன்" - விமர்சனம்

நந்திதா தனது கணவர் ஹவிஷை காணவில்லை என்று உதவி கமிஷனர் ரகுமானிடம் புகார் கொடுக்கிறார். இருவரும் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார்.

Update: 2019-06-07 11:19 GMT
நந்திதாவின் கணவர் புகைப்படத்தை பார்த்த ரகுமானுக்கு அதிர்ச்சி. ஏற்கனவே அனிஷா அம்புரோஜும் ஹவிஷ் தனது கணவர் என்றும், காணாமல் போய்விட்டார் என்றும் புகார் அளித்து இருக்கிறார்.

இதுபோல் வாய்பேச முடியாத இன்னொரு பெண்ணும் ஹவிஷ் தனது கணவர் என்கிறார். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று உறுத்த ஹவிஷ் மீது பெண்களை ஏமாற்றி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்து ரகுமான் விசாரிக்கிறார். அப்போது ஹவிஷ் தன்னுடைய சிறுவயது நண்பன் என்று முதியவர் ஒருவர் தகவல் சொல்ல போலீஸ் அதிர்ச்சியாகிறது. அந்த முதியவரும் கொடூரமாக கொல்லப்படுகிறார்.

நீண்ட தேடலுக்கு பிறகு ஹவிஷ் சிக்குகிறார். அப்போது மூன்று பெண்களையும் தனக்கு யார் என்றே தெரியாது என்கிறார். இந்த குழப்பங்களுக்கு பின்னணி என்ன என்பது விறுவிறுப்பான மீதி கதை.

ஐ.டி. இளைஞர் கார்த்தி, கூத்து கலைஞர் கிருஷ்ணமூர்த்தி என்று இரண்டு கதாபாத்திரங்களில் வருகிறார் ஹவிஷ். காதல் காட்சிகளில் கவர்கிறார். போலீஸ் பிடியில் சிக்கி தவிப்பு காட்டுகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ரகுமான் அனுபவ நடிப்பாலும், குற்றப் பின்னணி விசாரணையிலும் விறுவிறுப்பு காட்டுகிறார். சதா குடித்துக்கொண்டே இருப்பது சலிப்பு.

கிராமத்து பெண்ணாக வரும் ரெஜினா அபாரமான நடிப்பால் கவர்கிறார். காதலனை அடைய அவர் செய்யும் சைக்கோ வில்லத்தனங்கள் மிரட்டல். நந்திதா கவர்ச்சியான காதலி. அனிஷா, அதிதி, திரிதா சவுத்ரி ஆகியோரும் உள்ளனர். ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதையை பிறகு கொலை, சஸ்பென்ஸ் என்று திகிலும், பதற்றமுமாக விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார், இயக்குனர் நிசார் சபி. அவரது ஒளிப்பதிவு கூடுதல் பலம். சைதன் பரத்வாஜின் பின்னணி இசை திகில் சேர்க்கிறது.

மேலும் செய்திகள்