தேர்தலில் ஜெயிக்க காதலை பகடை காயாக வைத்து அரசியல் செய்வது: படம் களவாணி-2 விமர்சனம்

கிராமத்தில் வேலை வெட்டி இல்லாமல் மற்றவர்களை ஏய்த்து பிழைக்கிறார் விமல். இதனால் ஊரே அவரை வெறுக்கிறது. படம் களவாணி-2 சினிமா விமர்சனம்.

Update: 2019-07-19 17:57 GMT
அழகான ஓவியாவை சந்தித்து காதல் வயப்படுகிறார். பஞ்சாயத்து தேர்தல் வருகிறது.  அதில் விமலின் சொந்த மாமன் துரை சுதாகரும், ஓவியாவின் தந்தை வில்லன் ராஜும் போட்டியிடுகின்றனர். அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வாபஸ் வாங்கும் திட்டத்தோடு விமலும் தலைவர் பதவிக்கு நிற்கிறார். எதிர்பார்த்தபடி பணம் கிடைக்கவில்லை.

வேட்பு மனுவை வாபஸ் பெறும் நேரம் முடிந்து விடுவதால் தேர்தலில் நிற்கும் கட்டாயம் ஏற்படுகிறது. குறுக்கு வழியில் ஜெயிக்க காய் நகர்த்துகிறார். ஓவியாவின் காதலை முறிப்பதாக அவரது தந்தையிடம் பேரம்பேசி போட்டியில் இருந்து விலகி தன்னை ஆதரிக்க வைக்கிறார். இதனால் மாமன் துரை சுதாகருடன் நேரடி போட்டி ஏற்படுகிறது. வெற்றி பெறுவது யார்? என்பது கிளைமாக்ஸ்.

வெள்ளை வேட்டி-சட்டையில் விமல் கிராமத்து இளைஞராக வருகிறார். அவரது சேட்டைகளும் களவாணித்தனங்களும் ரசிக்க வைக்கின்றன. ஓவியா கர்ப்பமாக இருப்பதாக தவறாக நினைப்பதும் பிறகு உண்மை தெரிந்து காதல் வயப்படுவதும் சுவாரஸ்யம். தேர்தலில் ஜெயிக்க காதலை பகடை காயாக வைத்து அரசியல் செய்வது, எதிரணியினர் விஷம் தந்துவிட்டதாக நாடகமாடி அனுதாபம் பெறுவது ரசனை.

ஓவியா அழகான காதலி. நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது. தேர்தல் செலவுக்கு விமலிடம் பணத்தை கொடுத்து ஏமாறும் கஞ்சா கருப்பு சிரிக்க வைக்கிறார். இளவரசு, சரண்யா பொன்வண்ணன் அனுபவ நடிப்பால் கவர்கிறார்கள். ஊருக்கு உதவும் நல்ல அரசியல்வாதியாக வரும் துரை சுதாகர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

குடிகாரராக வரும் மயில்சாமி சிரிக்க வைக்கிறார். முந்தைய பாகம் அளவுக்கு காமெடி எடுபடவில்லை. திரைக்கதையில் இன்னும் வலு சேர்த்து இருக்கலாம். உள்ளாட்சி தேர்தல் பின்னணியில் கலகலப்பாக காட்சிகளை நகர்த்தி சிரிக்க வைக்கிறார் இயக்குனர் சற்குணம். கிராமத்தை மாசாணியின் கேமரா கண்முன் நிறுத்துகிறது. நடராஜன் சங்கரன் பின்னணி இசை பலம்.

மேலும் செய்திகள்