சாதி, மத துவேஷங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாநாயகன்: படம் கொளஞ்சி - விமர்சனம்

கிராமத்தில் வசிக்கும் கதாநாயகன் சமுத்திரக்கனி பெரியார் கொள்கையில் ஈடுபாடு உள்ளவர். "கொளஞ்சி" படத்தின் விமர்சனம்.

Update: 2019-07-30 17:13 GMT
சாதி, மத துவேஷங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார். இவரது மனைவி சங்கவி. இரண்டு மகன்கள். இதில் ஆறாவது வகுப்பு படிக்கும் மூத்த மகன் கொளஞ்சியின் சுட்டித்தனங்கள் ஆசிரியர்களையும் ஊர்க்காரர்களையும் எரிச்சல் படுத்துகிறது. சமுத்திரக்கனியிடம் புகார் செய்கிறார்கள்.

மகனை அடித்து உதைத்து கண்டிக்கிறார். இதனால் அவர் மீது கொளஞ்சிக்கு வெறுப்பு வருகிறது. ஒரு சூழ்நிலையில் சமுத்திரகனிக்கும் சங்கவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு பிரிகின்றனர். இதை சாதகமாக்கி கொண்டு கொளஞ்சி தாயுடன் சென்று விடுகிறான். தந்தை பாசத்தை கொளஞ்சி புரிந்து கொண்டானா? சமுத்திரக்கனியும் சங்கவியும் சேர்ந்தார்களா? என்பது மீதி கதை.

முற்போக்கு சிந்தனைவாதியாக வரும் சமுத்திரக்கனி அனுபவ நடிப்பால் கவர்கிறார். பள்ளியில் தீண்டாமைக்கு எதிராக அவர் பேசும் வசனங்கள் அழுத்தமானவை. கண்டிப்பான தந்தையாகவும் மனதில் நிற்கிறார். சங்கவி யதார்த்தமான நடிப்பால் மனதில் நிற்கிறார். கொளஞ்சியாக வரும் கிருபாகரன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். அவரது குறும்புத்தனங்கள் ரசிக்க வைக்கின்றன.

இளம் ஜோடியாக வரும் ராஜாஜி, சைனா நர்வார் காதல் காட்சிகள் கதையோடு ஒன்றாமல் தனித்து நிற்கிறது. இவர்கள் காதலை கிண்டல் செய்யும் நசாத் நகைச்சுவை சிரிக்க வைக்கிறது.

மூர்த்தி, ருஜீல் கிருஷ்ணா, ரஜின், கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா ஆகியோரும் கதாபாத்திரங்களில் நிறைவு. தந்தை மகன் உறவு சிக்கலையும் சாதிய அவலங்களையும் அழுத்தமான கதைக்களத்தில் காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர் தனராம் சரவணன். விஜயன் முனுசாமியின் கேமரா கிராமத்து வாழ்வியலை கண்ணில் பதிக்கிறது. நம்மை நடராஜன் சங்கரன் பின்னணி இசை ஒன்ற வைக்கிறது.

மேலும் செய்திகள்