கிட்டார் கம்பி மேலே நின்று - நவரசா விமர்சனம்

நவரசா தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். "கிட்டார் கம்பி மேலே நின்று" கதையின் விமர்சனம்.

Update: 2021-08-12 15:37 GMT
இசையமைப்பாளராக இருக்கும் சூர்யா, லண்டன் சென்று இசை மேதை ஆக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஆனால் அவரது தாயார் அவருடன் வர மறுப்பதால் அவர் தன்னுடைய ஆசையை தள்ளி போட்டுக் கொண்டே வருகிறார். ஒரு கட்டத்தில் சூர்யாவின் ஆசையை புரிந்துகொண்டு அவரது தாயார் லண்டன் செல்ல சம்மதிக்கிறார்.

இந்த நிலையில், சூர்யா இசையில் பாடுவதற்கான வாய்ப்பு நாயகி பிரயாகாவுக்கு கிடைக்கிறது. அப்போது பிரயாகாவுடன் பேச ஆரம்பிக்கும் சூர்யா, அவரும் தன்னைப்போலவே லண்டன் சென்று இசையில் சாதிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருப்பதை அறிகிறார். 

இசை மீது ஆர்வம் கொண்ட இருவரும், மனம்விட்டு பேச ஆரம்பிக்கின்றனர். இது ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. இறுதியில் அவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? சூர்யா லண்டன் போனாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் சூர்யா, வாரணம் ஆயிரம் படத்தில் பார்த்ததை போன்று இளமை ததும்பும் ரொமாண்டிக் ஹீரோவாக பளிச்சிடுகிறார். அவருக்கும் பிரயாகாவிற்கும் இடையேயான காதல் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. நாயகி பிரயாகா வாயால் பேசும் வசனத்தைவிட கண்களால் பேசும் வசனம் தான் அதிகம். தமிழில் முதல் படமாக இருந்தாலும் திறம்பட நடித்து இருக்கிறார்.

‘காதல்’ என்ற உணர்வை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் கவுதம் மேனன். காதல் படம் எடுப்பதில் தான் ஒரு கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. கார்த்திக்கின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. 

மொத்தத்தில் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ மனதில் நிற்கிறது.

மேலும் செய்திகள்