ரெளத்திரம் - நவரசா விமர்சனம்

நவரசா தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். "ரெளத்திரம்" கதையின் விமர்சனம்.

Update: 2021-08-12 16:37 GMT
நடிகர் ஸ்ரீராம், தங்கை மற்றும் தாயாருடன் வாழ்ந்து வருகிறார். குடும்பத்தில் வறுமை இருந்தாலும் சந்தோஷத்திற்கு பஞ்சமில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் வேலை பார்க்கும் முதலாளியிடம் காசு வாங்கி வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஸ்ரீராமின் தாயார் செல்கிறார். 

சொன்னபடியே அவர் காசு வாங்கிக் கொண்டு வந்தவுடன் குடும்பம் மகிழ்ச்சியாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் தனது தாயாருக்கு எப்படி காசு கிடைத்தது என்பது ஸ்ரீராமுக்கு தெரிய வருகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடையும் ஸ்ரீராம், கோபத்தின் உச்சத்துக்கு சென்று ஒரு முக்கிய முடிவை எடுக்கிறார். அது என்ன முடிவு? என்பதே படத்தின் மீதிக்கதை.

பெண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரித்விகா, அதற்கு ஏற்றார் போல் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஸ்ரீராமுக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதனை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். கந்துவட்டிக்காரராக வரும் அழகம் பெருமாள், கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம் ஆகியோர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

‘கோபம்’ என்ற உணர்வை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி உள்ளார் அரவிந்த் சாமி. இது அவருக்கு முதல் படமாக இருந்தாலும், நேர்த்தியாக இயக்கி உள்ளார். அவருக்குள் இப்படி ஒரு திறமை இருக்கிறதா என ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். ரித்விகாவின் கதாபாத்திரத்தை கையாண்டுள்ள விதம் சிறப்பு. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

மொத்தத்தில் ‘ரெளத்திரம்’ நேர்த்தி.

மேலும் செய்திகள்