குழந்தை கடத்தல் - ‘டாக்டர்’ சினிமா விமர்சனம்

ஒரு பள்ளிச் சிறுமி காணாமல் போக, கடத்தல் கும்பல் யார், அந்தச் சிறுமியை மீட்க அவளின் உறவுகளும், நாயகனும் எதுவரை செல்கின்றனர் என்பதைச் சொல்கிறார் இந்த 'டாக்டர்'.

Update: 2021-10-12 09:25 GMT
ஒரு சிறுமி கடத்தலும், துப்பறிந்து கண்டுபிடிக்கும் டாக்டரும்... இதுவே ஒரு வரி கதை.

சிவகார்த்திகேயன்தான் டாக்டர். அவர் பெண் பார்க்க போகிறார். அந்த பெண் (பிரியங்கா மோகன்) சிவகார்த்திகேயனை பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார். ஆனால் அவரை சிவகார்த்திகேயனுக்கு பிடித்து இருக்கிறது. இந்த நிலையில், பிரியங்கா மோகனின் அண்ணன் மகள் (சிறுமி) கடத்தப்படுகிறார்.

அந்த சிறுமியை கடத்தியது யார்? என்பது மர்மமாக இருக்கிறது. அவளை மீட்கும் முயற்சியுடன் துப்பறிய தொடங்குகிறார், சிவகார்த்திகேயன். லோக்கல் ரவுடியில் ஆரம்பித்து மிகப்பெரிய தாதா வரை ஒவ்வொரு ஆசாமியாக விசாரித்ததில், சிறுமிகள் கடத்தல் கும்பலின் தலைமையிடம் கோவாவில் இருப்பதை கண்டுபிடிக்கிறார்.அவர் கோவாவுக்கு போய் கடத்தல் கும்பலிடம் இருந்து சிறுமியை மீட்பது, ‘கிளைமாக்ஸ்.’

காதல், குறும்பு, டூயட், கலகல தமாசாக பார்த்த சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இல்லை. நடிப்பிலும், தோற்றத்திலும் சிரிப்பை மறந்த மாறுபட்ட சிவகார்த்திகேயன், வித்தியாசமாக ரசிக்க வைக்கிறார். சண்டை காட்சிகளில் நிறைய கவனம் செலுத்தி இருக்கிறார். குறிப்பாக அந்த ரெயில் சண்டை தமாஷ் கலந்த விருந்து.

பிரியங்கா மோகன் வனப்பும், செழிப்புமாக அழகு. ஆரம்ப காட்சிகளில் சில வரி வசனம் பேசிய அவர், இறுதி காட்சிகளிலும் குறைவாக வசனம் பேசி, வந்த வரை நிறைவாகி இருக்கிறார்.

யோகி பாபு வசன காமெடியில் படம் முழுக்க சிரிக்க வைக்கிறார். சிறுமிகளை கடத்தும் கும்பலுக்கு தலைவனாக வில்லன் வேடத்தில் மிரட்டுகிறார், வினய். இளவரசு, டி.வி. அர்ச்சனா, தீபா ஆகியோரும் இருக்கிறார்கள்.

கோவாவை படம் பிடித்த விதத்தில், ஒளிப்பதிவாளர் கார்த்திக் கண்ணன் அழகுக்கு அழகு சேர்த்து இருக்கிறார்.

அனிருத் இசையில், ‘‘செல்லமா செல்லம்மா’’ பாடல் ரசனையான ராகம். தவிர்க்க முடியாமல் படத்தின் இறுதியில் சேர்த்து இருக்கிறார்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கிறார். கனமான கதையை காமெடி கலந்து சொல்லி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தை ‘ராணுவ டாக்டர்’ ஆக காட்டியிருப்பதில் என்ன பலன்?

படத்தின் முதல் பாதி, சூப்பர் வேகம். இரண்டாவது பாதி, மந்தமாக பயணித்து, கோவா வந்ததும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

மேலும் செய்திகள்