வடசென்னை பூர்வ குடிமக்களின் உளவியல் பிரச்சனைகள் - ‘ஜெயில்’ சினிமா விமர்சனம்

அடித்தட்டு மக்களை நிலம் விட்டு வெளியேற்றினால் அவர்களுக்கு என்னென்ன உளவியல் பிரச்சனைகள் வரும், அவர்களை வெளியேற்றுவதன் மூலம் அதிகார மட்டம் அடையக்கூடிய லாபம் என்ன என்பதை பேச முயற்சித்திருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

Update: 2021-12-13 13:34 GMT
அங்காடி தெரு, வெயில், அரவான் ஆகிய வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய வசந்தபாலனிடம் இருந்து இன்னொரு படம். சென்னை நகரில் இருந்த குடிசை பகுதிகளை அகற்றி, அந்த மக்களை புறநகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்தியதால் அவர்கள் குற்றவாளிகளாகி விட்டார்கள் என்ற முன்னுரையுடன் தொடங்குகிறது, படம்.

ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் இசையும் அமைத்து இருக்கிறார். சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடும் கர்ணா என்ற கதாபாத்திரத்தில், கதைநாயகனாக வருகிறார். நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது.

ஜீ.வி.பிரகாசின் அம்மாவாக வருகிறார், ராதிகா சரத்குமார். மகனின் ரவுடித்தனம் பிடிக்காமல், ‘‘நான் சாகப்போகிறேன்’’ என்று அடிக்கடி சொல்லும் அவர், ஒருநாள் இறந்தே போகிறார். அவருடைய சாவு மர்மமாக இருக்கிறது. அவருக்கு இறுதி சடங்கு செய்யக்கூட குடிகார மகனால் முடியவில்லை.

பிரியாணி விற்கும் பெண்ணுடன் ஜீ.வி.பிரகாசுக்கு காதல் வருகிறது. இந்த நிலையில், அவருடைய நெருங்கிய நண்பர் ராக்கி கொல்லப்படுகிறார். ராக்கியின் மரணம் போலீஸ் அதிகாரி ரவிமரியாவுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. அது ஏன்? என்பது மீதி கதை.

கர்ணாவாக வரும் ஜீ.வி.பிரகாஷ், அவருடைய நண்பர் கலையாக வரும் பாண்டி, பாப்பம்மாவாக வரும் ராதிகா சரத்குமார் ஆகியோர் அசல் குப்பத்து மனிதர்களாகவே மாறியிருக்கிறார்கள். இடையிடையே ஒரு சித்தர் போல் வந்து போகும் பி.டி.செல்வகுமார், ‘‘யார் இவர்?’’ என்று கேட்க வைக்கிறார்.

பாடல்களும், பின்னணி இசையும் ஜீ.வி.பிரகாசின் பெயர் சொல்கின்றன.

விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் வசந்தபாலன். குற்றங்கள் புரிபவர்களை கதாநாயகனாக காட்டும் கற்பனை இன்னும் எத்தனை படங்களில் தொடருமோ?

மேலும் செய்திகள்