கனவு துரத்தினால் : ‘குதிரை வால்' சினிமா விமர்சனம்

கதை நாயகன், கலையரசன் தூக்கத்தில் இருந்து விழித்தபோது தனக்கு குதிரை வால் முளைத்திருப்பதை உணர்கிறார். வயதான பாட்டி, கணித ஆசிரியர், ஜோதிடர் என ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து தனக்கு குதிரை வால் வந்தது எப்படி? என்று கேட்கிறார்.

Update: 2022-03-20 12:24 GMT
மூன்று பேரும் மூன்று விதமான பதிலை சொல்ல - சரியான பதிலை தேடிச்செல்கிறார், கலையரசன். அவர் வேலை செய்யும் இடத்தில் சில மாறுதல்களை உணர்கிறார். அவரால், அவராக இருக்க முடியவில்லை. வேறு ஒருவராக உணர்கிறார்.

அவருடைய நடவடிக்கைகள் இயல்பாக இல்லாததை பார்த்து சிலர் பயப்படுகிறார்கள். சிலர், சந்தேகிக்கிறார்கள். படத்தின் முதல் பாதி, வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. இரண்டாம் பாதியில் ஒரு குக்கிராமத்தை காட்டுகிறார்கள். எம்.ஜி.ஆர். இறந்து போய்விட்டதாக ரேடியோவில் சொல்வதை கேட்டு ஒன்றிரண்டு பேர் நம்ப மறுக்கிறார்கள். ‘‘நேற்றுதானே அவருடைய படம் பார்த்தோம். அதில் நன்றாக இருந்தாரே’’ என்கிறார்கள். அப்புறம் ஒரு இடத்தில் கும்பலாக உட்கார்ந்து ஒப்பாரி வைக்கிறார்கள். அந்த ஊர் எல்லையில் ஒரு ஆழமான கிணறு இருக்கிறது. அதற்குள் எம்.ஜி.ஆரின் தொப்பியும், கருப்பு கண்ணாடியும் மிதக்கின்றன. அதைப்பார்த்து, ‘‘எம்.ஜி.ஆர். இங்கிருந்துதான் ஆகாயத்துக்கு பறந்து போய் இருக்கிறார் என்று ஒரு சிறுவனும், சிறுமியும் தங்கள் கற்பனையை அவிழ்த்து விடுகிறார்கள்.

படத்தின் தலைப்பே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. புதுமுக டைரக்டர்கள் மனோஜ், சியாம் ஆகிய இருவரின் இயக்கத்தில் படம் உருவாகி இருக்கிறது.

படம் தொடங்கியது முதல் கடைசி வரை புது அனுபவங்களை தருகிறது. நிறைய கேள்விகள் எழும்புகின்றன. சந்தேகங்கள் வருகின்றன. கதையையும், காட்சிகளையும் இன்னும் புரியும்படி சொல்லியிருக்கலாம். கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர்கள் பிரதீப் குமார், மார்ட்டின் விஸ்ஸர் பின்னணி இசையும் பாராட்டுக்குரியவை. கலையரசனின் திரைப்பயணத்தில், இந்த படம் தனி இடத்தை பிடிக்கும்.

மேலும் செய்திகள்