பனாரஸ்: சினிமா விமர்சனம்

ஓர் அழகான காதல் கதையில் டைம்லூப் வகை சயின்ஸ் த்ரில்லராக வந்திருக்கும் படம் பனாரஸ்.

Update: 2022-11-07 10:50 GMT

நாயகன் ஜயீத்கான் ஒரு கோவில் விழாவில் நாயகி சோனல் மோண்டோரியாவை சந்தித்து தான் டைம் ட்ராவல் செய்து வந்திருப்பதாகவும் நீ என் மனைவி என்றும் கூறுகிறார். அதன் காரணங்களும் சம்பவங்களும் சரியாக இருக்கவே அவரை நம்பி, தன்னோடு அழைத்துச்சென்று தங்க வைக்கிறார் சோனல். படுக்கையில் ஜயீத் எடுத்த செல்பி தவறுதலாக முகநூலில் பதிவாகி ட்ரெண்டிங் ஆக சோனலை இணையத்தில் கேலி செய்கின்றனர். இதனால் சோனல் ஊரைவிட்டு வெளியேறி காசி சென்று சித்தி வீட்டில் தங்குகிறார். சோனலை தேடி ஜயீத் காசிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு நடக்கும் சம்பவங்களெல்லாம் அமானுஷ்யமாக இருப்பதை கண்டு பிடிக்கிறார். அவரை யாரோ சிலர் நிஜமாகவே டைம் டிராவலுக்கு பயன்படுத்துகிறார்கள். அவர்கள் யார்? ஏன் அப்படி செய்தார்கள் என்பதை காதல், சென்டிமெண்ட் எல்லாம் சேர்த்து திரில்லராக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெயதீர்த்தா.

நாயகன் ஜயீத் கானுக்கு முதல் படம். ஆனால் அப்படி எதுவும் தெரியாமல் தேர்ந்த நடிப்பை கொடுத்துள்ளார். அவரது கதாபாத்திர வடிவமைப்பும், காசியில் இடம்பெறும் காட்சிகளும் சினிமாவிற்கு புதிது. முதல்பாதியில் ஜாலியாக வரும் ஜயீத் கான் இரண்டாம் பாதியில் பொறுப்பாகவும், சிறப்பாகவும் கதையை நகர்த்த உதவுகிறார். சோனல் மோண்டோரியா கதைக்கு கச்சிதமாக பொருந்துகிறார். காசியில் ஆட்டோ ஓட்டுனராக சுஜய் சாஸ்த்ரி, நாயகியின் சித்தப்பாவாக வேதியியல் விஞ்ஞானி அச்யுத்குமார், பரக்கத் அலி ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர். ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை பிற்பகுதியில் வேகம் எடுக்கிறது.

இடைவேளைக்கு பிறகு ஆச்சரியமான விஷயங்களை கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ஜெயதீர்த்தா. காதல் என்பதைத்தாண்டி கதையில் வைத்திருக்கும் அழுத்தமான காட்சிகள் கட்டிப்போடுகிறது. அஜனீஷ் லோக்நாத் இசையில் அம்மா பாடல் மனதில் ஒலிக்கிறது. அத்வைதா குருமூர்த்தியின் கேமரா காசியின் குருகிய தெருக்களில் நுழைந்து எப்போதும் கூட்டமாக பார்த்த காசியை வெறிச்சென்று காட்டியிருப்பது அழகு.

Tags:    

மேலும் செய்திகள்