சினிமா விமர்சனம்: பொய்க்கால் குதிரை

பிரபுதேவா கதாநாயகனாக நடித்த படம். அப்பா- மகள் சென்டிமென்ட்டில், ஒற்றைக் கால் கொண்ட கதாநாயகன் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்துள்ளார்.

Update: 2022-08-07 10:09 GMT

 

பிரபுதேவாவை தலைகீழாக தொங்கவிட்டு ரத்தக்களறியாகும் வரை அடிப்பது போல் படம் ஆரம்பிக்கிறது. கதைப்படி, பிரபுதேவா ஒரு விபத்தில் ஒரு காலை இழந்தவர். மனைவியை இழந்த அவருக்கு ஒரே ஒரு மகள். அந்த ஐந்து வயது சிறுமிக்கு விசித்திரமான நோய். அதை குணப்படுத்த வேண்டுமானால் ரூ.70 லட்சம் செலவாகும் என்று டாக்டர்கள் கூறிவிடுகிறார்கள்.

"கோடீஸ்வரி வரலட்சுமியின் மகளை (சிறுமியை) கடத்தினால், உன் மகள் மருத்துவ செலவுக்கு பணம் கிடைத்துவிடும் என்று பிரபுதேவாவுக்கு ஜெயில் கைதியான பிரகாஷ்ராஜ்" யோசனை சொல்கிறார். அதன்படி, வரலட்சுமியின் மகளை கடத்துவதற்காக பிரபுதேவா செல்கிறார். அங்கே அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. இவர் வருவதற்கு முன்பு வேறு யாரோ அந்த சிறுமியை கடத்தி சென்று விடுகிறார்கள்.

கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டாளா, பிரபுதேவா மகளுக்கு என்ன நோய், அவளுக்கு ஆபரேஷன் நடந்ததா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு 'கிளைமாக்ஸ்" பதில் அளிக்கிறது.

 

இதுவரை கதாநாயகிகளுடன் டூயட் பாடிக்கொண்டிருந்த பிரபுதேவா, முதன்முதலாக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஒரு காலை இழந்த அவர், 5 வயது சிறுமிக்கு அப்பாவாக நடித்துள்ளார். ரத்த காயங்களுடன் தலைகீழாக தொங்கவிடப்பட்ட நிலையில், ஆரம்ப காட்சியிலேயே அவருடைய கதாபாத்திரம் மீது ஈர்ப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டு விடுகிறது.

 

வரலட்சுமியின் மகளை கடத்துவதற்காக அந்த சிறுமி படிக்கும் ஸ்கூலுக்கு போய் பயமும், தயக்கமுமாக நோட்டமிடும் காட்சியில் ஆரம்பித்து, ஆஸ்பத்திரியில் மகளை காணாமல் பரிதவிப்பது வரை படம் முழுக்க பிரபுதேவா கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

 

வரலட்சுமி சரத்குமார் ஒரு குழந்தைக்கு தாயாக, கோடீஸ்வரி வேடத்தில், கச்சிதம். பிரகாஷ்ராஜ் கைதியாகவும், ஜெகன் நண்பராகவும் கவுரவ வேடங்களில் வருகிறார்கள்.

டி.இமான் பின்னணி இசையில் டமார்...டுமீல்... என வாத்தியங்களையும் அலற விட்டு இருக்கிறார். ஒளிப்பதிவாளர் பல்லு தன் திறமையை முழுவதுமாக காட்டியிருக்கிறார். ஒரு தந்தை-மகள் கதைக்குள் ஆக்‌ஷன், சென்டிமெண்ட்டை புகுத்தி திகில் பட பாணியில் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் சன்தோஷ் பி.ஜெயக்குமார். கிளைமாக்சில் நிறைய சம்பவங்களை கொண்டுவந்து திணித்திருக்க வேண்டாம். பிரபுதேவா ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

 

Tags:    

மேலும் செய்திகள்