வெற்றிகரமான ஆன்லைன் கலந்துரையாடலுக்கு சில டிப்ஸ்

ஆன்லைன் கலந்துரையாடலுக்கு ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதைவிட மடிக்கணினி மற்றும் மேசைக்கணினி பயன்படுத்துவதே சிறந்தது. குறிப்புகள் எடுப்பதற்கு இது உதவியாக இருக்கும்.

Update: 2021-10-25 04:30 GMT
கொரோனா பரவலுக்குப் பிறகு பலர் வீட்டிலிருந்தபடியே பணியாற்றி வருகிறார்கள். முக்கியமான கலந்துரையாடல், ஆட்கள் தேர்வு போன்றவை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன. இதற்காக பல்வேறு இணையவழி தளங்கள் உதவியாக இருக்கின்றன. 

இவ்வாறு கலந்துரையாடலில் பங்கு பெறும்போது, சில தொழில்நுட்ப தகவல்கள், ஒலி-ஒளி மாற்றங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்கான சில டிப்ஸ் இங்கே..

* சரியான இடம்

வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதற்கு தகுதியான இடத்தை தேர்வு செய்யுங்கள். அந்த இடம் வெற்று அறையாக இல்லாமல் நாற்காலி, மேசை, தரை விரிப்பு போன்றவை போடப்பட்டு இருத்தல் 
நல்லது. இதன் மூலம் ஆன்லைன் கலந்துரையாடலின்போது எதிரொலி கேட்பதைத் தவிர்க்க முடியும்.

உங்களுக்கு பின்னால் இருக்கும் சூழல் கண்களுக்கு உறுத்தாதவாறு பார்த்து கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்துக்குப் பின்னால் வெள்ளை நிற சுவர் இருந்தால் நல்லது. கவனத்தை திசை திருப்பும் வகையிலான படங்கள், ஓவியங்கள்  இருப்பதை தவிர்க்கவும்.

சரியான ஒளி அமைப்பு மிகவும் முக்கியம். மங்கிய வெளிச்சம் கொண்ட அறைகள் உங்கள் ஆன்லைன் கலந்துரையாடலில் தொய்வை ஏற்படுத்தலாம். கணினித் திரையில் உங்கள் முகம் தெளிவாகத் தெரியும்படி போதிய வெளிச்சம் இருக்க வேண்டும்.

ஆன்லைன் கலந்துரையாடலுக்கு ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதைவிட மடிக்கணினி மற்றும் மேசைக்கணினி பயன்படுத்துவதே சிறந்தது. குறிப்புகள் எடுப்பதற்கு இது உதவியாக இருக்கும்.

* தொழில்நுட்ப ஏற்பாடுகள்

ஆன்லைன் கலந்துரையாடலுக்கு உபயோகிக்கும் தளம் சரியாக இயங்குகிறதா? பகிர்தல், ஆன்லைன் கேமரா இயக்குதல், ஆடியோ அமைப்பை சரிசெய்தல் போன்ற அடிப்படை வசதிகளை இயக்குவது எப்படி? என்பது போன்ற தொழில்நுட்ப ஏற்பாடுகளை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

வெப் கேமராவின் அமைப்பு கண்களின் உயரத்திற்கு சரியாக இருக்கிறதா? என்று பார்த்து பொருத்த வேண்டும். பேசுவதற்கு பயன்படும் மைக்ரோ போன் தரமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் கலந்துரையாடல் தடையின்றி நடைபெறும்.

* அடிப்படை விஷயங்கள்

கலந்துரையாடலுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான உடை அணிந்து, முழுவதும் தயாரான நிலையில் பங்கு பெற வேண்டும். மற்ற தளங்களில் இருந்து வரும் நோட்டிபிகேஷன்களை கலந்துரையாடல் முடியும்வரை நிறுத்தி வைக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற இடையூறுகளை தவிர்க்கலாம்.

கணினியின் திரையைப் பார்த்து பேசாமல், கேமராவை பார்த்து பேச வேண்டும். கலந்துரையாடலில் பங்குபெற்றுக்கொண்டே மின்னஞ்சல்களை பார்ப்பது, போனில் வரும் குறுஞ் செய்திகளைப் பார்ப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 

மேலும் செய்திகள்