பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார்

பிரபல பழம் பெரும் பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார்.

Update: 2017-04-27 07:04 GMT
மும்பை

பாலிவுட்டில் சினிமாக்களில் 1970 - 80களில் முன்னணி ஹீரோவாகத் திகழ்ந்தவர் வினோத் கன்னா( 70) பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் தொகுதி, பா.ஜ., - எம்.பி.,யாக உள்ளார்.   வினோத் கன்னாவுக்கு கடந்த 31 ந்தேதி திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து மும்பை கிர்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை வினோத்கன்னா காலமானார்.

வினோத் கன்னா இந்தி நடிகர்களிலே மிகவும் அமைதியானவர். பிரபலமான நடிகர் என்ற கர்வம் இல்லாதவர். ஆனால் அவருடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. முதல் மனைவி கீதாஞ்சலிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்தில் போய் முடிந்தது. பிறகு கவிதா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
புகழின் உச்சியில் இருந்தபோது மண வாழ்க்கையில் நடந்த கசப்பால் விரக்தி அடைந்த வினோத் கன்னா, திரையுலகை விட்டே விலகப்போகிறேன் என்று அந்த சமயத்தில் அறிவித்து, திரை உலகத்தையே அதிர்ச்சியடைய வைத்தார்.

1968ம் ஆண்டு மேன் ஹா மீட் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து மேரே அப்னே, மேரா ஹோன் மேரா தேஷ், இமிதிஹான், இங்கார், அமர் அக்பர், அந்தோனி, லகு ஹி டூ ரங், குர்பானி, தயவான் மற்றும் ஜர்ம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக ஷாருக்கான் நடித்த தில்வாலே படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மனைவி கீதாஞ்சலியை விவாகரத்து பெற்றுவிட்டார். அவர்களுக்கு அக்ஷய் கன்னா, ராகுல் கன்னா ஆகிய இரு மகன்கள். இரண்டாவது மனைவி கவிதாவிற்கு  சக்ஷி கன்னா என்ற மகனும், ஸ்ருதா கன்னா என்ற மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்