2011 உலக கோப்பை இறுதிப்போட்டி குறித்து விசாரணையா? ரணதுங்கா மீது கம்பீர், நெஹ்ரா பாய்ச்சல்

2011 -உலக கோப்பை இறுதிப்போட்டி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ரணதுங்கா கூறியதற்கு கம்பீர், நெஹ்ரா பதிலடி கொடுத்துள்ளனர்.

Update: 2017-07-15 04:22 GMT
புதுடெல்லி,

கடந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் ஆடிய இந்திய அணி கவுதம் கம்பீர், தோனி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை எட்டியது.  

இந்த தொடர் முடிந்து 6 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.  தனது பேஸ்புக் பக்கத்தில் ரணதுங்கா வெளியிட்ட வீடியோ பதிவில்,  ‘வான்கடே மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நானும் இந்தியாவில் வர்ணனையாளராக இருந்தேன். நாம் தோல்வி அடைந்தபோது வேதனைப்பட்டேன். அத்துடன் எனக்கு சந்தேகமும் எழுந்தது. அந்தப்போட்டியில் இலங்கைக்கு என்ன ஆனது என்பது குறித்து நாம் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும்.

எல்லாவற்றையும் இப்போது என்னால் வெளியிட முடியாது. ஆனால் ஒருநாள் வெளியிடுவேன். எனவே விசாரணை நடத்தப்பட வேண்டும். வீரர்கள் தங்கள் சுத்தமான ஆடைகளால் உள்ளே இருக்கும் அழுக்கை மறைக்க முடியாது’ என யாரையும் குறிப்பிடாமல் பேசினார். அவரது இந்த பேஸ்புக் வீடியோ இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ரணதுங்காவின் கருத்துக்கு இந்திய அணியில் இருந்து சமீப காலமாக ஓரம் கட்டி வைக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அர்ஜுனா ரணதுங்காவின் கூற்றுக்கள் என்னை வியக்க வைத்தது. சர்வதேச கிரிக்கெட்டில் மதிப்புமிக்க ஒருவரின் தீவிரமான கருத்து இதுவாகும். உரிய ஆதாரங்களுடன் அவர் தனது குற்றச்சாட்டுக்களை முன் வைக்க வேண்டும் நான் கருதுகிறேன்” என்றார். 

ஆஷிஷ் நெஹ்ரா கூறும் போது, ரணதுங்காவின் கருத்துக்கு பதிலளித்து பெருமை சேர்க்க நான் விரும்பவில்லை. இதுபோன்ற கருத்துக்களுக்கு முடிவே கிடையாது.  இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு பெற்ற வெற்றி குறித்து நான் கேள்வி எழுப்பினால்,  அது நன்றாக இருக்குமா? எனவே இந்த விவாகாரத்தில் ஈடுபடவிரும்பவில்லை. ஆனாலும், அவரைப்போன்ற உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் இது போன்று கூறும் போது வருத்தம் அளிக்கிறது” இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில், ரணதுங்காவின் வீடியோ பதிவு குறித்து கருத்து கூற ஹர்பஜன் சிங் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

மேலும் செய்திகள்