பிங்க் பந்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்: மிட்செல் ஸ்டார்க் சாதனை

பிங்க் பந்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை, மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.

Update: 2021-12-19 07:05 GMT
கோப்புப்படம்
அடிலெய்டு, 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு ஆட்டம்) அடிலெய்டில் நடந்து வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 473 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 17 ரன்களுடன் பரிதவித்தது. கேப்டன் ஜோ ரூட் (5 ரன்), டேவிட் மலான் (1 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று ஜோ ரூட்டும், டேவிட் மலானும் இணைந்து ஆஸ்திரேலியாவின் தாக்குதலை அருமையாக சமாளித்து ரன்கள் திரட்டினர். ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது. இறுதியில் ‘பாலோ-ஆன்’ தவிர்ப்பு ஸ்கோரான 274 ரன்களை கூட அந்த அணியால் நெருங்க முடியவில்லை. ஸ்டோக்ஸ் 34 ரன்களில் (98 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார்.

முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 84.1 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி ‘பாலோ-ஆன்’ ஆனது. அந்த அணி கடைசி 86 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும், நாதன் லயன் 3 விக்கெட்டும், கேமரூன் கிரீன் 2 விக்கெட்டும், மைக்கேல் நேசர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

இதன்படி வேகப்பந்து வீச்சாளர் 31 வயதான மிட்செல் ஸ்டார்க் பகல்-இரவு டெஸ்டுகளில் 50 விக்கெட்டுகள் (9 டெஸ்ட்) வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அடுத்து இங்கிலாந்துக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காத ஆஸ்திரேலிய அணி 237 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 17 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 13 ரன்னில் ரன்-அவுட் ஆனார். மார்கஸ் ஹாரிஸ் 21 ரன்களுடனும், மைக்கேல் நேசர் 2 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி இதுவரை மொத்தம் 282 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியிருக்கிறது.

4-வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 48 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து அணியை விட 392 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பிட்ட நேரம் விளையாடி விட்டு இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது டெஸ்டில் வெற்றி கண்டிருந்த ஆஸ்திரேலியாவுக்கு இந்த டெஸ்டிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

மேலும் செய்திகள்