முதல் போட்டியில் டக் அவுட்டான இளம் வீரர்..! ஆறுதல் தெரிவித்த கேப்டனுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் தனது முதல் போட்டியில் டக் அவுட்டான இளம் வீரருக்கு அவரது கேப்டன் ஆறுதல் தெரிவித்தார்.

Update: 2022-03-28 11:53 GMT
மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நடந்து முடிந்த 19-வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ராஜ் பாவா பஞ்சாப் அணியின் சார்பில் விளையாடினார். 19-வயதே ஆன அவருக்கு இது  முதல் ஐபிஎல் போட்டியாகும்.

நேற்று பஞ்சாப் அணியின் பேட்டிங் போது களமிறங்கிய அவர் முதல் பந்திலே ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அப்போது மைதானத்தின் எல்லைக்கோட்டுக்கு அருகே நின்று கொண்டு இருந்த பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் அவரை ஆறுதல் படுத்தும் விதமாக ராஜ் பாவாவின் தலையில் கைவைத்து லேசாக தட்டி கொடுத்தார்.

ரன் ஏதும் அடிக்காதபோதும் கூட தொடக்க போட்டியில் களம் காணும் இளம் வீரரை பாராட்டிய கேப்டன் மயங்க் அகர்வாலை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்