பாண்ட்யா தலைமையின் கீழ் விளையாடுவது அவமானமா? மனம் திறந்த ரோகித் சர்மா

நடப்பு ஐ.பி.எல். சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டார்.

Update: 2024-05-03 12:19 GMT

image courtesy: PTI

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா இந்த சீசனுக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டார்.

ஐ.பி.எல். தொடரில் ஒரு கோப்பையை வெல்வதற்கே தடுமாறிய மும்பை அணி 2013 - 2020 வரையிலான காலகட்டங்களில் ரோகித் சர்மா தலைமையில் 5 கோப்பைகளை வென்றது. அதனால் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்த ரோகித் சர்மா இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை தலைமை தாங்கி வருகிறார்.

அப்படிப்பட்ட அவரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை அணி நிர்வாகம் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த பல ரசிகர்கள் மும்பை அணியின் போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் பாண்ட்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் அனைத்தும் எல்லா நேரங்களிலும் உங்களுக்கு சாதகமாக செல்லாது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதுதான் வாழ்க்கை என்று தெரிவிக்கும் அவர் இதற்கு முன் தோனி, சச்சின், பாண்டிங் போன்ற பலரது தலைமையில் சாதாரண வீரராக விளையாடியுள்ளதாக கூறியுள்ளார். எனவே பாண்ட்யா தலைமையில் விளையாடுவதில் தமக்கு எந்த அவமானமும் இல்லை என்று தெரிவிக்கும் ரோகித் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"இது வாழ்க்கையின் அங்கமாகும். இங்கே அனைத்தும் உங்களது வழியில் செல்லாது. இது சிறப்பான அனுபவமாகும். இதற்கு முன்பும் நான் நிறைய கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். எனவே இது எனக்கு ஒன்றும் புதிது கிடையாது. உங்களுக்கு முன் என்ன நடக்கிறதோ அதனுடன் சேர்ந்து நீங்கள் செல்ல வேண்டும். ஒரு வீரராக உங்களிடம் என்ன தேவைப்படுகிறதோ அதை செய்ய வேண்டும். அதையே நான் கடந்த ஒன்றரை மாதமாக செய்ய முயற்சித்து வருகிறேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்