கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி இரு தரப்பினருக்கு இடையே தகராறு; பொதுமக்கள் சாலை மறியல்

செந்துறை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update:2017-07-02 04:00 IST
செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு கரகாட்டம் நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பதாகையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் திருவிழாவிற்காக ஒரு தரப்பினர் சார்பில் வைக்கப்பட்ட பதாகைகளையும் மற்றொரு தரப்பினர் கிழித் துள்ளனர்.

இதனை தொடர்ந்து நேற்று காலை ஒரு தரப்பினர் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொய்யாதநல்லூர் காலனிதெரு பொதுமக்கள் குடிநீர் வினியோகம் செய்ய கோரி அரியலூர்-செந்துறை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், செந்துறை போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையையடுத்து உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்-செந்துறை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்