தஞ்சை: வழிப்பறிக்கு திட்டமிட்ட 5 பேர் கைது

தஞ்சையில் வழிப்பறிக்கு திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, கொலை, திருட்டு வழக்குகளில் இவர்கள் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

Update: 2018-09-30 23:02 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை நகரில் குற்றங்களை தடுக்கவும், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை பிடிக்கவும் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார். இதனால் தஞ்சை மேற்கு, கிழக்கு, தெற்கு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகுமாரன், தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார், வடக்குவாசல் நால்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி மருத்துவமனை முன்பு சிலர், நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது26), ஜார்ஜ் சாமுவேல்(28), பாலாஜிநகர் 5-வது தெருவை சேர்ந்த ராஜா(44), வடக்குவாசல் சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்த நித்தின்ராஜ்(25), கலையரசன்(25) ஆகியோர் என்பதும், இவர்கள் அந்த வழியாக செல்பவர்களிடம் வழிப்பறிக்கு திட்டமிட்டதும் தெரிய வந்தது.

இவர்கள் மீது வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளன. ஜார்ஜ் சாமுவேல் மீது கொலை வழக்கு உள்ளது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க இதுபோன்ற ரோந்து பணி தொடர்ந்து நடைபெறும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்