நாகர்கோவிலில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து கல்லூரி மாணவிகள் பேரணி

நாகர்கோவிலில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

Update: 2018-10-02 22:45 GMT
நாகர்கோவில்,

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திருநெல்வேலி மக்கள் தொடர்பு கள அலுவலகமும், நாகர்கோவில் நகராட்சியும் இணைந்து நடத்திய தூய்மை இந்தியா இயக்க விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேரணியை மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பேரணி பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு, டிஸ்டில்லரி ரோடு வழியாக வடசேரி பஸ் நிலையத்தை சென்றடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவிகள் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்துச் சென்றனர்.

பேரணி வடசேரி பஸ் நிலையத்தை சென்றடைந்ததும் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காந்தியின் உருவப்படத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். திருநெல்வேலி மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி அலுவலர் போஸ்வெல் ஆசீர் வரவேற்று பேசினார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

முன்னதாக நாகர்கோவில் நகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், நகர்நல அதிகாரி கின்ஷால் ஆகியோர் பேசினர். முடிவில் சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்