நாமக்கல் சக்தி விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

நாமக்கல் நடராஜபுரம் சக்தி விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-01-31 22:15 GMT
நாமக்கல், 

நாமக்கல் நகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட நடராஜபுரம் 4-வது தெருவில் சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினசரி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள சன்னதி முன்பு பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல் ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. இந்த உண்டியல் ஆண்டுதோறும் மே மாதம் திறக்கப்படும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். காலையில் கோவிலை சுத்தம் செய்ய பணியாளர்கள் வந்தபோது கோவில் முன்புற கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் உள்ள பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் சில்லரை காசுகளும் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

இது குறித்து அவர்கள் உடனடியாக நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் உடைக்கப்பட்ட உண்டியலை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

உடைக்கப்பட்ட உண்டியலில் சுமார் ரூ.40 ஆயிரம் இருந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். குடியிருப்பு அதிக அளவில் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்