சேலத்தில் பட்டப்பகலில் துணிகரம் உதவித்தொகை வாங்கி தருவதாக மூதாட்டியிடம் பணம் பறிப்பு டிப்-டாப் ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு

சேலத்தில் பட்டப்பகலில் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் பணம் பறிக்கப்பட்டது. இந்த துணிகர சம்பவம் தொடர்பாக டிப்-டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-01-31 21:30 GMT
சேலம், 

சேலம் காந்தி விளையாட்டு மைதானம் அருகே உள்ள சீத்தாராம்செட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி பாப்பாத்தி (வயது 70). இவர் நேற்று காலை வீட்டில் இருந்தார். அப்போது அவருடைய வீட்டுக்கு தலையில் தொப்பி அணிந்து கொண்டு டிப்-டாப்பாக ஒருவர் வந்தார். பின்னர் அவர் பாப்பாத்தியிடம் கணவன், மனைவி இருவருக்கும் முதியோர் உதவித்தொகை வருகிறதா? என கேட்டார்.

அதற்கு பாப்பாத்தி அந்த நபரிடம் தனக்கு மட்டுமே உதவித்தொகை வருவதாகவும், எனது தனது கணவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இதைக்கேட்ட அந்த நபர் மாரிமுத்துவுக்கு உதவித்தொகையாக ரூ.12 ஆயிரத்திற்கான காசோலை வந்துள்ளது எனவும், இந்த காசோலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் உள்ளது என கூறினார். நீங்கள் உடனே வந்தால் அதை வாங்கி தருகிறேன், அதற்கு நீங்கள் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என அந்த நபர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பாப்பாத்தி அந்த ஆசாமியுடன் பெரியார் மேம்பாலத்திற்கு வந்தார். பின்னர் அந்த ஆசாமி ஒரு ஆட்டோவை வரவழைத்து அதில் ஏறிக்கொண்டனர். அந்த நபர் பாப்பாத்தியிடம் தான் கேட்ட பணம் எங்கே என கேட்டுள்ளார். அவர் தன்னிடம் இருந்த ரூ.800 அந்த நபரிடம் கொடுத்தார்.

பின்னர் பாப்பத்தியை கலெக்டர் அலுவலகம் அருகே இறக்கிவிட்டுவிட்டு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஜெராக்ஸ் எடுத்து வாருங்கள், நான் அதிகாரியிடம் காசோலை வாங்குவது குறித்து பேசுகிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து அந்த ஆசாமி புறப்பட்டு சென்றார்.

இதைநம்பி பாப்பாத்தி அங்கிருந்து நடந்து சென்று ஜெராக்ஸ் எடுத்து விட்டு சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்திற்கு வந்து காத்திருந்தார். ஆனால் அரை மணி நேரத்திற்குமேல் ஆகியும் அந்த ஆசாமி வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்ட பாப்பாத்தி கதறி அழுதார். இதுகுறித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் டிப்-டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோன்று வீராணம் மற்றும் கொண்டலாம்பட்டி பகுதிகளில் உள்ள முதியோர்களிடம் இவ்வாறு சிலர் பணம் பறித்து சென்று உள்ளனர். முதியோர்களை நூதன முறையில் ஏமாற்றி வரும் மர்ம ஆசாமிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்