குட்கா பதுக்கிய வழக்கில் ‘சீல்’ வைக்கப்பட்ட மளிகைக்கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

கரூரில் குட்கா பதுக்கிய வழக்கில் ‘சீல்‘ வைக்கப்பட்ட மளிகைக்கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 2 ஓட்டல்களிலும் விசாரணை நடத்தினர்.

Update: 2019-01-31 23:00 GMT
கரூர்,

கரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராயனூர் வெள்ள கவுண்டன் நகர், அண்ணா நகர், ஒத்தையூர் உள்ளிட்ட இடங்களில் குடோன்களில் மூட்டை, மூட்டையாக குட்கா, பான்மசாலா உள்பட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 14¾ டன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக தாந்தோன்றிமலை போலீசார் தனித்தனியாக 3 வழக்குகள் பதிவு செய்து உழவர் சந்தை அருகே மளிகை கடை நடத்தி வரும் கரூர் சின்னஆண்டாங்கோவில் ஏ.கே.சி.காலனியை சேர்ந்த தங்கராஜ் ( வயது 60) மற்றும் அவரது பங்குதாரர் ராயனூர் கே.கே.நகரை சேர்ந்த செல்வராஜ் (55) ஆகியோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய ராயனூரை சேர்ந்த கொங்கு மணியை (47) தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். அந்த மளிகை கடைக்கு போலீசார் ‘சீல்‘ வைத்தனர்.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்பேரில், கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சசிதீபா உள்பட அதிகாரிகள் நேற்று மாலை கரூர் உழவர் சந்தை அருகேயுள்ள தங்கராஜ் மளிகைக்கடைக்கு வந்தனர். பின்னர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் அந்த கடையின் பூட்டுகளில் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றி அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஏதும் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் குட்கா உள்ளிட்டவை வாங்கியது தொடர்பான முக்கிய ஆவணங்கள், டைரி குறிப்புகள், ரசீது உள்ளிட்டவை ஏதும் இருக்கிறதா? எனவும் தேடிப்பார்த்தனர். இதற்கிடையே கரூர் மற்றும் க.பரமத்தியிலுள்ள பிரபலமான 2 ஓட்டல்களுக்கு சென்று அங்கு குட்கா உள்ளிட்டவை பதுக்கப்பட்டுள்ளதா? என விசாரணை நடத்தினர். இந்த ஆய்வு அறிக்கையை போலீஸ் மூலம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்