காங்கிரஸ் தொண்டரை அறைந்த துணை முதல்-மந்திரி; பா.ஜ.க. வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் ஒருவர் சிவக்குமாரின் தோள் மீது கை போட்டு, புகைப்படம் எடுப்பதற்காக கேமராவுக்கு முன் தயாரானார்.

Update: 2024-05-05 21:03 GMT

ஹாவேரி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கர்நாடகாவின் ஹாவேரி நகரில் சவானூர் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினோடா அசூட்டி என்பவருக்கு வாக்குகள் கேட்டு, கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரை அவர் அறையும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது. அதில், காரில் இருந்து சிவக்குமார் வெளியே வருகிறார். அவரை காங்கிரஸ் தொண்டர்கள் சூழ்ந்திருந்தனர். டி.கே., டி.கே. என அவருடைய பெயரை கூறியபடி கோஷமிட்டனர்.

அப்போது, கட்சி தொண்டர்களில் ஒருவர் சிவக்குமாரின் தோள் மீது கை போட்டு, புகைப்படம் எடுப்பதற்காக கேமராவுக்கு முன் தயாரானார். இதனால், ஆத்திரமடைந்த சிவக்குமார் உடனடியாக அவரை அறைந்து, கையை தள்ளி விட்டு சென்றார். உடன் இருந்த பாதுகாவலர்களும் அவரை பின்னே கொண்டு சென்றனர்.

இந்த சம்பவத்தில் அறை வாங்கியவர் நகராட்சி உறுப்பினர் என்பதும் அவரது பெயர் அலாவுதீன் மணியார் என்றும் தெரிய வந்தது. இந்த வீடியோவை பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவரான அமித் மாளவியா வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில், காங்கிரஸ் தொண்டர்கள் இன்னும் காங்கிரசுக்காக பணியாற்ற வேண்டும் என ஏன் விரும்புகின்றனர்? என்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.

அவர்களுடைய தலைவர்கள் அறைகின்றனர். அவமதிப்பு செய்கின்றனர். போட்டியிட வாய்ப்பு தருவதில்லை (குடும்ப உறுப்பினர்களால் தொண்டர்கள் அனைவரும் ஓரம் கட்டப்படுகின்றனர்). ஊழல் பணத்திற்காகவா அவர்களின் பக்கம் நிற்கின்றனர்? சுயமரியாதை இல்லையா? என அதில் கேட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்