ஆரணி அருகே குடிநீர் வினியோகத்தில் 3 மாதமாக பாரபட்சம் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் மறியல்

ஆரணி அருகே குடிநீர் வினியோகத்தில் பாரபட்சம் செய்யப்பட்ட நிலையில் குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-02 22:45 GMT
கண்ணமங்கலம், 

ஆரணி அருகே உள்ள பையூர் ஊராட்சி காலனி பகுதியில் குடிநீர் பிரச்சினை தலை தூக்கியுள்ளது. இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகத்தில் பாரபட்சம் செய்யப்படுவதாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் குறை கூறி வந்தனர்.

கோடை தொடங்கும் முன்னரே குடிநீர் பிரச்சினை வந்த நிலையில் இனி வரும் காலங்களில் நிலைமை மோசமாகும் என்பதை உணர்ந்த அவர்கள் நேற்று காலி குடங்களுடன் ஆரணியிலிருந்து வாழைப்பந்தல் செல்லும் சாலையில் மில்லர்ஸ் ரோடு சந்திப்பில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

காலை நேரத்தில் இப்போராட்டம் நடந்ததால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளி பஸ்களில் செல்லும் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டனர். அப்போது அவ்வழியே அமைச்சர் நிகழ்ச்சிக்கு சென்ற ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குள் அங்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி, தாசில்தார் கிருஷ்ணசாமி ஆகியோர் வந்து விட்டனர். அவர்களும் சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டம் நடத்தியவர்கள் தரப்பில் கூறுகையில், “பையூர் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் பையூர் காலனி பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பாரபட்சமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக இது போன்ற நிலை உள்ளது. இதனை சரி செய்ய பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை. தற்போது நாங்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் திண்டாடுகிறோம். இப்பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என சாலை மறியல் செய்கிறோம்” என்றனர்.

விரைவில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்