திடீர் உடல்நல குறைவு: நிர்மலா தேவிக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 5 மணி நேரம் சிகிச்சை

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிர்மலாதேவிக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 5 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Update: 2019-02-02 23:15 GMT

மதுரை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 மாதங்களாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.

பேராசிரியை நிர்மலாதேவி உள்பட 3 பேர் மீதான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் அவர்கள் மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரிய மனு மீதான விசாரணை மதுரை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் நிர்மலாதேவி உள்பட 3 பேரும் அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 30–ந் தேதி கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட நிர்மலாதேவி பரபரப்பு பேட்டி அளித்தார். தனக்கு ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்கிறார்கள் என்றும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் தன்னை மிரட்டி வாக்குமூலம் பெற்றனர் எனவும் குற்றம்சாட்டினார்.

நேற்று காலையில் திடீரென நிர்மலாதேவியை மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து வந்தனர். சிறையில் அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதாக தெரியவருகிறது. அங்கு இருதய சிகிச்சை பிரிவு, எலும்பு நோய் மற்றும் பொது சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். சுமார் 5 மணி நேரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே நிர்மலாதேவி மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்ட தகவல் அறிந்ததும் அங்கு பத்திரிகையாளர்கள் திரண்டனர். அவருக்கான சிகிச்சைகள் குறித்து விசாரித்த போது, நிர்மலாதேவிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கலாம் எனவும், அதனால் இருதய நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் இதுதொடர்பாக போலீசார் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

மேலும் செய்திகள்