டெல்லி: ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் வெப்ப பக்கவாத சிகிச்சை பிரிவு தொடக்கம்

டெல்லியில் முதன்முறையாக ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் வெப்ப பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க கூடிய பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2024-05-08 17:30 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் கோடை காலத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், வெப்ப அலை பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது.

இதன்படி, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவையின்றி வெயிலில் பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வெப்ப அலை பரவலை முன்னிட்டு, வெப்ப பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, டெல்லியில் முதன்முறையாக ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் வெப்ப பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க கூடிய பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

இதனை மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ரோலி சிங் இன்று தொடங்கி வைத்துள்ளார். இதன்பின்னர் அவர் பேசும்போது, இந்த திட்டம் ஒரு நல்ல தொடக்கம். நவீன சாதனங்கள் இந்த மருத்துவமனையில் உள்ளன. இந்த வசதிகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இதனை ஏற்பாடு செய்ததற்காக மருத்துவ குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார். இதேபோன்று, ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெப்ப பக்கவாத மேலாண்மைக்கான அறிவுறுத்தல்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பியுள்ளது.

வெப்ப பக்கவாதம் ஏற்படாமல் தடுக்க மருத்துவமனைகளில் ஐஸ் பேக்குகள், குளுக்கோஸ் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும்படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்