வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற 585 ஆசிரியர்கள் ஒரேநாளில் இடமாற்றம் கல்வி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட 585 ஆசிரியர்களை ஒரேநாளில் இடமாற்றம் செய்து கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2019-02-02 22:15 GMT
புதுக்கோட்டை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் உள்பட 92 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து 92 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட 7 ஆயிரத்து 30 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் வேலைநிறுத்த போராட்ட காலத்தில் அரசு மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியும், 30-ந் தேதி காலை பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 585 ஆசிரியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 43 ஆசிரியர்கள், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 159 ஆசிரியர்கள், புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 383 ஆசிரியர்கள் உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி அந்தந்த ஒன்றியங்களில் உள்ள வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதற்கான ஆணையை வட்டாரக்கல்வி அலுவலர்கள் மூலமாக உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற 585 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்