தை அமாவாசை; தாமிரபரணியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

தை அமாவாசையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

Update: 2019-02-04 22:15 GMT
விக்கிரமசிங்கபுரம்,

இந்துக்களின் முக்கிய விரத நாட்களில் தை அமாவாசையும் ஒன்று. அன்றைய தினம் இந்துக்கள் தங்களது இறந்து போன குடும்ப மூதாதையர்களுக்கு நதிக்கரையில் வைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்து தர்ப்பணம் செய்து வழிபடுவர்.

நேற்று பாபநாசத்தில் தர்ப்பணம் செய்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் அதிகாலையிலேயே வந்தனர். அவர்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, எள்ளும் தண்ணீரும் இரைத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின்னர் அவர்கள் பாபநாசம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வழிபாட்டுக்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்ததால், வாகனங்கள் நிறுத்துவதற்கு வழியில்லாமல் பாபநாசம் ரோட்டில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

வழக்கம் போல் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பாபநாசத்துக்கு சில பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, பக்தர்கள் இறக்கி விடப்பட்டனர். பின்னர் நேரம் செல்ல செல்ல பாபநாசத்தில் பக்தர்களின் கூட்டம் ஓரளவுக்கு குறைந்து, வழக்கம் போல பஸ்கள் பாபநாசத்துக்கு சென்றன.

குற்றாலம்-சேரன்மாதேவி

தை அமாவாசையை முன்னிட்டு குற்றாலத்தில் நேற்று பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். குற்றாலம் மெயின் அருவி கரையில் இதற்காக புரோகிதர்கள் அமர்ந்திருந்தனர். நேற்று காலையில் இருந்தே ஏராளமானோர் புரோகிதர்களிடம் தர்ப்பணம் செய்தனர். தற்போது அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக இருப்பதால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.

சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். அவர்கள் ஆற்றில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

அம்பை காசிநாதர் கோவில் தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.

நெல்லை

நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் பகுதியில் உள்ள படித்துறை, இசக்கி அம்மன் கோவில் படித்துறை, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, சிந்துபூந்துறை படித்துறைகளில் நேற்று காலையில் ஏராளமானோர் கூடினார்கள்.

அவர்கள் அங்கிருந்த புரோகிதர்கள் முன்னிலையில் தர்ப்பணம் கொடுத்தனர். புரோகிதர்கள் வேத மந்திரங்களை கூறி தர்ப்பணம் கொடுக்கச் செய்தனர். பின்னர் தர்ப்பணம் கொடுத்தவர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, அந்தந்த பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர். இதையொட்டி நேற்று தாமிரபரணி ஆற்றங்கரையில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்