'மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என காங்கிரஸ் எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்' - பிரதமர் மோடி

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-01 13:53 GMT

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"மதத்தின் பெயரால் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்த மாட்டோம் எனவும், மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு வழங்கவோ, அரசியல் சாசனத்துடன் விளையாடவோ மாட்டோம் எனவும் அறிவிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு நான் சவால் விடுகிறேன்.

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று காங்கிரஸ் எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இதை சொல்வது மோடி என்பதை காங்கிரஸ் கட்சியினர் நன்றாக கவனிக்க வேண்டும். நான் இருக்க்கும் வரை அரசியல் சாசனத்தின் பெயரால் இடஒதுக்கீட்டை வைத்து விளையாட அனுமதிக்க மாட்டேன்.

நானும், பா.ஜனதா கட்சியும் இருக்கும் வரை எஸ்.சி./எஸ்.டி./ஓ.பி.சி. மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு வேலை மற்றும் கல்வியில் வழங்கப்படும் இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்