கள்ளக்குறிச்சியில் தனியார் பஸ் அலுவலகத்தில் ரூ.15 லட்சம் கொள்ளை

கள்ளக்குறிச்சியில் தனியார் பஸ் அலுவலகத்தில் ரூ.15 லட்சம் கொள்ளை போனது. இதுதொடர்பாக மேலாளர் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-02-04 22:51 GMT
கள்ளக்குறிச்சி, 


கள்ளக்குறிச்சி ராஜா நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராமநாதன் (வயது 38), தனியார் பஸ் அதிபர். இவருக்கு சொந்தமாக 4 பஸ்கள் உள்ளன. இதற்காக கள்ளக்குறிச்சி-சேலம் மெயின்ரோட்டில் உள்ள அண்ணாநகரில் பஸ் அலுவலகம் உள்ளது. மேலும் இவர் கியாஸ் ஏஜென்சியும் நடத்தி வந்தார். பஸ் அலுவலகத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் மேலாளர் செல்வம் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அலுவலகத்தை பூட்டி விட்டு, பஸ் டிக்கெட்டுக்கான மெஷினை கண்டக்டர்களிடம் கொடுப்பதற்காக கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்துக்கு சென்றார்.

அங்கு அவர் கண்டக்டர்களிடம் டிக்கெட்டுக்கான மெஷினை கொடுத்து விட்டு 6 மணிக்கு மீண்டும் அலுவலகத்துக்கு திரும்பி வந்தார். அப்போது அலுவலகத்தின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதுபற்றி அவர் அலுவலக உரிமையாளருக்கும், கள்ளக்குறிச்சி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமநாதன் பதறியடித்துக்கொண்டு அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் அலுவலகத்துக்குள் சென்று பார்த்த போது, அங்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ்களில் வசூலான பணமும், கியாஸ் ஏஜென்சியில் வசூலான பணமும் வைத்திருந்த 2 பைகளை காணவில்லை. இதற்கிடையே கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று அதிகாலை மேலாளர் செல்வம், அலுவலகத்துக்கு வந்து விட்டு சென்ற பிறகு, அலுவலகத்தின் கதவு பூட்டுகளை யாரோ உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் 2 பைகளில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அந்த பைகளில் ரூ.14 லட்சத்து 98 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பஸ் அலுவலகத்துக்கு நேற்று அதிகாலை மேலாளர் செல்வம் வந்து விட்டு சென்ற பிறகு கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால், செல்வம் உள்பட 5 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்