தெங்குமரஹாடாவில் வீடுபுகுந்து திருடிய வாலிபர் கைது

தெங்குமரஹாடாவில் வீடுபுகுந்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 4 பவுன் நகையை மீட்டனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-02-05 22:30 GMT
கோத்தகிரி, 

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தெங்குமரஹாடாவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 66). விவசாயி. இவருடைய மனைவி வேலாத்தாள் (60). ராமசாமி கடந்த மாதம் 30-ந் தேதி சொந்த வேலையாக பண்ணாரிக்கு சென்றார். வீட்டில் வேலாத்தாள் மட்டும் தனியாக இருந்தார். அவர் சம்பவத்தன்று காலையில் தனது வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 4 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் கோத்தகிரி அருகே உள்ள சோலூர் மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையில் சோலூர் மட்டம் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த பாக்யராஜ் (32) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ராமசாமி வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு, தனது நண்பர் ஹரி என்பவருடன் சேர்ந்து வீட்டின் கதவை உடைத்து நகையை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில், மறைத்து வைத்திருந்த 4 பவுன் நகையை மீட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஹரி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்