சேலம் பழைய பஸ்நிலையம் மூடப்பட்டது போஸ் மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் செயல்பட தொடங்கியது

சேலம் பழைய பஸ்நிலையம் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் போஸ் மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் செயல்பட தொடங்கியது.

Update: 2019-03-31 22:45 GMT

சேலம்,

சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.92 கோடி செலவில் பழைய பஸ்நிலையத்தை புதுப்பித்து நவீன வசதிகளுடன் ஈரடுக்கு பஸ் நிலையமாக மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பணிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அருகில் உள்ள போஸ் மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நிறைவடைந்துள்ளன.

இந்தநிலையில், நேற்று முதல் சேலம் போஸ் மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் செயல்பட தொடங்கியது. இதனால் பழைய பஸ்நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து வழித்தடங்களுக்கான பஸ்கள் இனிமேல் போஸ் மைதானத்தில் இருந்து இயக்கப்படும் எனவும், பழைய பஸ்நிலையம் மூடப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சேலம் மாநகர பகுதிக்குள்ளும், வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், ராசிபுரம், மல்லூர், வெண்ணந்தூர், ஓமலூர், தாரமங்கலம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

அதேசமயம், தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக உயர்கோபுர மின் விளக்குகள், நிழற்குடை, குடிநீர், கழிப்பிட வசதி உள்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், பழைய பஸ் நிலையத்தில் வாகனங்கள் நுழையாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்