குலசேகரன்பட்டினத்தில் கோஷ்டி மோதல்: ரவுடி அடித்துக்கொலை 4 பேருக்கு அரிவாள் வெட்டு

குலசேகரன்பட்டினத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ரவுடி அடித்துக் கொலை செய்யப்பட்டார். மேலும் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது

Update: 2019-04-01 23:15 GMT
குலசேகரன்பட்டினம், 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கருங்காலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா, கூலி தொழிலாளி. இவருடைய மகன் ராமமூர்த்தி (வயது 24). லாரி டிரைவராக வேலை செய்து வந்த இவர் மீது குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு திருட்டு, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இவரது பெயர், போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ராமமூர்த்தி மது குடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் தனது வீட்டின் அருகில் உள்ள தெருவில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த வென்னிமலை, மாடசாமி, மூக்காண்டி உள்ளிட்டவர்கள் கண்டித்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த முத்துகுமார், அமிர்தராஜ் ஆகியோர் தங்களுடைய நண்பர் ராமமூர்த்திக்கு ஆதரவாக பேசினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளாலும், கற்களாலும் தாக்கி கொண்டனர்.

அப்போது ஆத்திரம் அடைந்த முத்துகுமார் அரிவாளால் வென்னிமலை, மாடசாமி, மூக்காண்டி ஆகிய 3 பேரையும் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வென்னிமலை உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து தாக்கியதில் ராமமூர்த்தி பலத்த காயம் அடைந்தார். மேலும், முத்துகுமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த வென்னிமலை, மாடசாமி, மூக்காண்டி ஆகிய 3 பேரையும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியிலும், முத்துகுமார் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், தாக்கியதில் படுகாயம் அடைந்த ராமமூர்த்தி, அங்குள்ள பழைய ரேஷன் கடை அருகில் மயங்கி கிடந்தார். அப்போது ராமமூர்த்தியின் தந்தை சுப்பையா, தன்னுடைய மகன் போதையில் மயங்கி கிடப்பதாகவும், போதை தெளிந்தவுடன் அவர் வீட்டுக்கு வந்து விடுவார் என்று கருதிச் சென்று விட்டார். ஆனால், ராமமூர்த்தி நேற்று அதிகாலையில் தனது வீட்டின் முன்பு இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்த ராமமூர்த்தியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ராமமூர்த்தியின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எதிர் தரப்பினர் தாக்கியதில் மயங்கிய ராமமூர்த்தி அதிகாலையில் மயக்கம் தெளிந்து, தனது வீட்டின் முன்பு சென்று தூங்கியபோது இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வென்னிமலை, மாடசாமி, மூக்காண்டி உள்ளிட்ட 7 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குலசேகரன்பட்டினத்தில் ரவுடி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்