சென்னை வந்த ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி

மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சென்னை வந்த ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

Update: 2024-04-29 19:33 GMT

கோப்புப்படம்

ஜோலார்பேட்டை,

சென்னையிலிருந்து காட்பாடி-ஜோலார்பேட்டை வழியாக பெங்களூரு மற்றும் கேரள மாநிலத்துக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும் சரக்கு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இரட்டை வழித்தடமான இந்த பாதை முற்றிலும் மின்மயமாக்கப்பட்டதாகும்.

இந்த நிலையில் நேற்று 7.30 மணியளவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூர் பகுதியில் 25 ஆயிரம் கிலோ வோல்ட் உயர் மின்னழுத்த கம்பி திடீரென அறுந்து விழுந்தது. அப்போது கோவையிலிருந்து சென்னை நோக்கி வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த இடத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. மின்கம்பி அறுந்து விழுந்ததை பார்த்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை வளத்தூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தியதோடு ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

அதனை தொடர்ந்து பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மேல்பட்டியிலும், சேலம்- அரக்கோணம் பாசஞ்சர், ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வளத்தூரிலும், கோவையிலிருந்து சென்னை நோக்கி வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் வாணியம்பாடி ரெயில் நிலையத்திலும், மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் பச்சகுப்பம் ரெயில் நிலையத்திலும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

ஜோலார்பேட்டை ரெயில்வே ஊழியர்கள் மற்றும் உயர் மின்னழுத்த பிரிவு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புதிய மின் உயர் மின்னழுத்த கம்பியை மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தற்காலிகமாக தன்பாத் ரெயில் மட்டும் இரவு 11 மணிக்கு புறப்பட்டு சென்றது. மற்ற ரெயில்கள் தொடர்ந்து அங்கேயே நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

Tags:    

மேலும் செய்திகள்