அமரம்பேடு ஊராட்சியில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி உடைந்த குழாயை சீரமைக்க கோரிக்கை

காஞ்சீபுரம் மாவட்டம் அமரம்பேடு ஊராட்சியில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். உடைந்த குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-04-02 21:30 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள அமரம்பேடு ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அமரம்பேடு பகுதியில் ஸ்ரீபெரும்புதூர்-குன்றத்தூர் நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.

இந்த பணியின் போது புதுப்பேர் பகுதியில் இருந்து அமரம்பேடு கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாய் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் குடிநீர் வினியோகம் தடைப்பட்டது.

அமரம்பேடு கிராமத்தில் வசிக்கும் மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை யினரிடம் முறையிட்டபோது நெடுஞ்சாலை பணிகள் முடிவடைந்ததும் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடி நீர் குழாய் சீரமைத்து தரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கோடைகால வெயிலில் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாய்களை சரிசெய்து உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்