கள்ளக்காதலியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் தற்கொலை

கள்ளக்காதலியை கொலை செய்து எரித்த வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-04-02 23:30 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ள ஆலங்குளத்தை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மகள் மாலதி (வயது 20). சென்னை கல்லூரியில் பி.ஏ. படித்துவிட்டு அங்கு வேலை தேடி வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29–ந் தேதி திருவிழாவிற்கு வீட்டிற்கு வந்தவர் மாயமாகி விட்டார். இதைதொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 13–ந்தேதி உத்தரகோசமங்கை விலக்கு அருகே கண்மாய் பகுதியில் எலும்புக்கூடாக எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஏற்கனவே திருமணமான சிவக்குமார் (30) என்பவருடன் மாலதி பழகி வந்தது தெரிந்தது. சிவக்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் மாலதியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து தீ வைத்து எரித்ததாக தெரிவித்தார். இதை தொடர்ந்து சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளிவந்த வாலிபர் சிவக்குமார் கடந்த ஒரு மாதமாக சத்திரக்குடி போலீஸ் நிலையத்தில் காலையும், மாலையும் கோர்ட்டு உத்தரவின்படி கையெழுத்து போட்டு வந்தார்.

இந்தநிலையில் அவர் இச்சம்பவம் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மனைவி குடும்பம் நடத்த வருமாறு அழைத்தபோதும் அவர் மறுத்து விட்டாராம். மனவேதனையில் இருந்த அவர் வீட்டின் அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்