நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: அண்ணாமலை அதிர்ச்சி

ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2024-05-04 08:18 GMT

சென்னை,

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.பி. ஜெயக்குமாரை காணவில்லை என்று அவரது மகன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கடந்த 2-ம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து ஜெயக்குமார் சென்றதாகவும் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் ஜெயக்குமார் போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த சூழலில் கே.பி. ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கரைசுத்து புதூர் அருகே உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் சடலமாக இன்று மீட்கப்பட்டார். ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் ஜெயகுமாரின் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில், "காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

கடந்த ஏப்ரல் 30ம்தேதி அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் அவர்கள் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, தி.மு.க. ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது.

உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்