மாயார் ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பு சுற்றுலா பயணிகளுக்கு தடை

மாயார் ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே ஆற்றில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-04-06 22:15 GMT

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கோடை வறட்சி அதிகரித்து உள்ளது. இதனால் பாண்டியாறு, ஓவேலி, மாயார் உள்பட பல ஆறுகளில் நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் வனவிலங்குகள், பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. வனப்பகுதியில் பசுந்தீவனம் போதிய அளவு கிடைக்காததால் காட்டுயானைகள் ஊருக்குள் அதிகளவு வருகின்றன.

கூடலூர், முதுமலை பகுதியில் கோடை மழை பெய்யாததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் காட்டுயானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் மாயார் ஆற்றில் வழிந்தோடும் தண்ணீரை குடித்து தாகத்தை தணித்து வருகின்றன.

இதேபோல் மாயார் ஆற்றில் முதலைகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. மழைக்காலத்தில் மாயார் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். அந்த நேரத்தில் முதலைகள் எதுவும் தென்படுவது இல்லை. தற்போது தண்ணீர் அடியோடு குறைந்து விட்டதால் முதலைகள் நடமாட்டத்தை காண முடிகிறது. சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்க வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். இருப்பினும் சில பகுதியில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆற்றில் குளித்து வருகின்றனர். முதலைகள் நடமாட்டம் உள்ளதால், ஆற்றில் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அவ்வாறு தடையை மீறி ஆற்றில் இறங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்