பொருட்கள் வழங்காததை கண்டித்து ரேஷன்கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

போச்சம்பள்ளி அருகே ரேஷன் பொருட்கள் முறையாக வழங்காததை கண்டித்து கிராம மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.

Update: 2019-04-08 22:15 GMT
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காட்டு வென்றஹள்ளியில் பகுதி நேர ரேஷன் கடை உள்ளது. இங்கு இந்த கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி பயன்பெற்று வருகின்றனர். கடந்த சிலமாதங்களாக இங்கு பொருட்களை வழங்கவில்லை எனவும், காலதாமதமாக கடை திறப்பதாகவும், சில மணி நேரங்களிலேயே கடையை மூடி விடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று பொதுமக்கள் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தனர். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும் கடை திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் சக்தி அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ரேஷன் கடை ஊழியரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊழியரை அழைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சக்தி உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்