பாம்பன் பாலத்தில் சென்றபோது ரெயிலில் இருந்து தவறி கடலில் விழுந்தவர் மீட்பு

பாம்பன் பாலத்தில் சென்ற போது, ராமேசுவரம் ரெயிலில் இருந்து தவறி கடலில் விழுந்தவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Update: 2019-04-10 23:15 GMT

ராமேசுவரம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வடகாடு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 62). இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து சென்னை புறப்பட்டு சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் புதுக்கோட்டை செல்வதற்காக பயணம் செய்தார்.

இந்த ரெயில் பாம்பன் பாலத்தில் சென்றபோது கழிவறைக்கு செல்வதற்காக இருக்கையில் இருந்து எழுந்து வந்த கருப்பையா, வாசல் அருகே வந்த போது நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்து விட்டார்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் சற்று நீந்தி, ஒரு பாறையை பிடித்தபடி போராடினார். அப்போது அங்கு தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்த முனியாண்டி இதை கவனித்தார். பின்னர் பாம்பன் பாலத்தின் பொறியாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி உத்தரவின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான போலீசார், கடலோர போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, கியாசுதீன் மற்றும் பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த நதீம்கான், மீனவர்கள் ஒரு படகில் அங்கு சென்று கருப்பையாவை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்பு அவர் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்