நெல்லை அருகே பயங்கரம்: கள்ளக்காதலை கைவிட மறுத்த மகள் படுகொலை - இளநீர் வியாபாரி வெறிச்செயல்

படுகொலை செய்யப்பட்ட முத்துபேச்சிக்கு இரு மகன்கள் உள்ளனர்.

Update: 2024-04-30 04:53 GMT

நெல்லை,

நெல்லை அருகே தலையை துண்டித்து இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். அவர் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் தந்தையே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் கொம்பையா. கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி முத்துபேச்சி (வயது 35). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் முத்துபேச்சி கணவரை விட்டு பிரிந்து, நெல்லை-கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் கொங்கந்தான்பாறை பகுதியில் உள்ள தனது தந்தை மாரியப்பன் (55) வீட்டில் மகன்களுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் முத்துபேச்சிக்கும், உறவினர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தந்தை மாரியப்பன் கண்டித்துள்ளார். ஆனாலும் முத்துபேச்சி இதனை பொருட்படுத்தாமல் கள்ளக்காதலை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலையில் வெளியே சென்றிருந்த முத்துபேச்சியை தந்தை மாரியப்பன் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். வழியில் அவரை மேலப்பாட்டத்தில் உள்ள பாட்டி வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தை கடந்து அந்த பகுதியில் உள்ள காட்டு பகுதியில் சென்றபோது மாரியப்பன் திடீரென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, மகள் என்றும் பாராமல் முத்துபேச்சியை வெட்டுவதற்கு முயற்சி செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துபேச்சி அலறியடித்தவாறு அருகில் உள்ள காட்டு பகுதியில் தலைதெறிக்க ஓடினார். ஆனாலும் அவரை விரட்டி சென்ற மாரியப்பன் அரிவாளால் முத்துபேச்சியின் தலையை துண்டாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்துபோனார்.

இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். முத்துபேச்சியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ பகுதியில் நின்றிருந்த மாரியப்பனை போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கொலைக்கான மேற்படி காரணம் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். மாரியப்பன் பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரி பகுதியில் சாலையோரமாக இளநீர் கடை நடத்தி வந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்