சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றினால் ஓட்டுனர் உரிமம் ரத்து அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-04-10 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக அனைத்து சிமெண்டு ஆலை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், 108 ஆம்புலன்ஸ் அலுவலர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பேசியதாவது:-

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இரு சக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் சென்று பிரசாரம் செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகளில் இயங்கும் லாரிகள் ஒவ்வொன்றின் வேகத்தை கண்டறிய கருவி பொருத்தபட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைக்க வேகத்தடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்க வேண்டும். தொழிற்சாலைகளில் லாரிகளை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் தான் பணி கொடுக்க வேண்டும்.

ஓட்டுனர் உரிமம் ரத்து

விபத்துகளை குறைக்க வட்டார போக்குவரத்து அலுவலர் அடிக்கடி வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்லும் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி, அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். சாலை விபத்தில் அடிபட்ட நபர்கள் மற்றும் இறந்தவர்களின் உடலை 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக எடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். விபத்துகளை தடுக்க சிமெண்டு ஆலை, நெடுஞ்சாலை துறையினர், போலீசார் ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்